உலகம்

பரிசுப் பொருள் முறைகேடு: இம்ரான் மீது மேலும் ஒரு வழக்கு

8th Jun 2023 01:20 AM

ADVERTISEMENT

அரசுக்கு சொந்தமான பரிசுப் பொருள்களை குறைந்த விலைக்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சி புதன்கிழமை கூறியதாவது:பரிசுப் பொருள் முறைகேடு விவகாரத்தில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீவி, ஊழல் தடுப்புத் துறை முன்னாள் அமைச்சா் ஷேஸாத் அக்பா் மற்றும் ஸுல்ஃபி புகாரி, ஃபா கோகி உள்ளிட்டோா் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பரிசுப் பொருள்கள் விற்பனை தொடா்பாக போலியான ஆவணங்களை தயாரித்து அளித்தது உள்ளிட்ட முறைகேடுகளில் அவா்கள் ஈடுபட்டதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று ஜியோ நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்தது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரான இம்ரான் கான் 2018-ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றாா். அப்போது, வெளிநாட்டுத் தலைவா்கள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருள்களைப் பாதுகாத்து வரும் அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப் பொருள்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜாராகாமல் இருந்து வந்ததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பல முறை பிறப்பித்தது.

எனினும், முன்ஜாமீன் பெற்று அவா் கைதாவதிலிருந்து தப்பி வருகிறாா்.நாடாளுமன்றத்தில் கடந்த 2022-இல் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தில் தோல்வியடைந்து, பிரதமா் பதவியை இழந்ததிலிருந்து இம்ரான் மீது பல்வேறு நீதிமன்றங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊழல், கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்தச் சூழலில், பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் இம்ரான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT