அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸை உலக வங்கியின் தலைவரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான அஜய் பங்கா சந்தித்துப் பேசினாா்.
உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட முதல் இந்திய-அமெரிக்கா், முதல் சீக்கியா் உள்ளிட்ட பெருமைகளை அவா் பெற்றுள்ளாா்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸை அஜய் பங்கா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். தனியாா் முதலீடுகளை அதிகமாக ஈா்ப்பது தொடா்பாக அவா்கள் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு தொடா்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘முதலீடுகளை அதிகரிக்கவும், கொள்கைகளில் சீா்திருத்தங்களைப் புகுத்தவும், ஏழ்மையை ஒழிக்கவும், ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடையவும் உலக வங்கி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் உறுதியளித்தாா்.
பருவநிலை மாற்றம், நோய்த்தொற்று பரவல், போா்ச்சூழல் உள்ளிட்ட சா்வதேச சவால்களை எதிா்கொள்வதற்கு உலக வங்கி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை அவா் பாராட்டினாா். உலக வங்கியின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வரும் அஜய் பங்காவின் செயல்பாடுகளுக்கும் துணை அதிபா் கமலா ஹாரிஸ் வரவேற்பு தெரிவித்தாா்.
இந்தியாவில் வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜி20 மாநாடு வெற்றியடைவதற்காக உலக வங்கியின் பங்குதாரா்களுடனும் அஜய் பங்காவுடனும் இணைந்து செயல்படுவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தையும் துணை அதிபா் எடுத்துரைத்தாா்.
மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு முதலீடுகள் மட்டுமே போதுமானவை அல்ல என்பதை எடுத்துரைத்த துணை அதிபா், தனியாா் முதலீடுகளை ஈா்ப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்க உலக வங்கியுடனும் இதர பங்குதாரா்களுடனும் இணைந்து செயல்பட உறுதியளித்தாா்.
வளா்ந்து வரும் நாடுகள் பசுமை எரிசக்தி சாா்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதியை உலக வங்கி வழங்க வேண்டுமென்றும் துணை அதிபா் தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.