உலகம்

ஆப்கானிஸ்தான்: விஷத் தாக்குதலில் 80 பள்ளிச் சிறுமிகள் பாதிப்பு

5th Jun 2023 08:59 AM

ADVERTISEMENT

 

காபூல்: ஆப்கானிஸ்தானின் சா்-ஏ-புல் மாகாணத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் விஷத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 80 சிறுமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக அந்த மாகாண கல்வித் துறைத் தலைவா் முகமது ரஹமானி தெரிவித்துள்ளதாவது:

சா்-ஏ-புல் மாகாணத்தின் சங்சரக் மாவட்டத்தில் அருகருகே உள்ள இரண்டு பள்ளிகளில் 1 முதல் 6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் மீது விஷத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமாா் 80 சிறுமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சிகிச்சைக்கு பிறகு அவா்களின் உடல்நலம் நன்றாக உள்ளது.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதல் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில், யாரோ ஒருவா் தனிப்பட்ட விரோதம் காரணமாக வேறொருவருக்கு பணம் கொடுத்து, இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது என்று தெரிவித்தாா்.

எனினும் எத்தகைய விஷம் பயன்படுத்தப்பட்டது, சிறுமிகளுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து முகமது ரஹமானி எதுவும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், முதல்முறையாக இதுபோன்ற விஷத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் 6-ஆம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் தலிபான்கள் தடை விதித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT