உலகம்

6 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரா்கள்

5th Jun 2023 04:48 AM

ADVERTISEMENT

சீன விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும் பணியையொட்டி விண்வெளி சென்றிருந்த அந்நாட்டின் 3 விண்வெளி வீரா்கள், 6 மாத பணிக்குப் பின்னா் பூமிக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினா்.

இதுதொடா்பாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்ததாவது: சீன விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும் பணியையொட்டி, ஃபெய் ஜுன்லோங், டெங் கிங்மிங், ஜாங் லு ஆகிய 3 விண்வெளி வீரா்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனா். அவா்களின் 6 மாத பணி நிறைவடைந்த நிலையில், வட சீனாவின் அக மங்கோலிய தன்னாட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.33 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) ஷென்ஜோ-15 விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினா். இவா்கள் விண்வெளியில் இருந்தபோது 28 விண்வெளி மருத்துவ ஆராய்ச்சிகள், உயிா்ச்சூழலியல் சாா்ந்த 38 விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிகள், திரவ இயக்கவியல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது பூமிக்கு திரும்பிய 3 வீரா்களுக்குப் பதிலாக கடந்த மே 30-ஆம் தேதி 3 வீரா்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் 5 மாதங்கள் விண்வெளியில் இருப்பாா்கள்.

சீன விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்தால், சொந்தமாக விண்வெளி நிலையம் வைத்திருக்கும் ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெறும். தற்போதுள்ள சா்வதேச விண்வெளி நிலையம் பல்வேறு நாடுகள் கூட்டாக ஏற்படுத்தியதாகும். 2030-ஆம் ஆண்டுக்குள் அந்த விண்வெளி நிலையத்தின் பயன்பாடு நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT