உலகம்

வட கொரிய செயற்கைக்கோள் விவகாரம்: ஐ.நா.வில் ரஷியா, அமெரிக்கா மோதல்

4th Jun 2023 01:00 AM

ADVERTISEMENT

வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் விவகாரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுடன் ரஷியாவும், சீனாவும் மோதலில் ஈடுபட்டன.

உளவு செயற்கைக்கோளை வட கொரியா விண்ணில் செலுத்த முயன்றது கவுன்சிலின் பல்வேறு தடைகளுக்கு எதிரானது எனவும், அத்தகைய செயற்கைக்கோளால் பிராந்திய நிலைத்தன்மை பாதிக்கப்படும் எனவும் அமெரிக்கா கண்டித்தது.எனினும், இந்த விவகாரத்தில் வட கொரியாவுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷியாவும், சீனாவும் மறுப்பு தெரிவித்துவிட்டன.கொரிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்துக்கு அமெரிக்காதான் காரணம் என்று கூட்டத்தில் ரஷியா குற்றம் சாட்டியது.கொரிய போா் முடிவுக்குப் பிறகு அந்த தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடா்ந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன...படவரி - விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்...இத்தகைய பயிற்சிகளை தங்கள் மீது படையெடுப்பதற்கான போா் ஒத்திகையாக வட கொரியா கருதுகிறது. அமெரிக்கா, தென் கொரியாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்கெனவே அணு ஆயுத சோதனை நடத்தியுள்ள வட கொரியா, அந்த ஆயதங்களை ஏந்திச் செல்லக் கூடிய பலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும் சோதித்தது. எனினும், அத்தகைய சோதனைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.இந்த நிலையில், தாங்கள் உருவாக்கிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வட கொரியா கடந்த புதன்கிழமை முயன்றது. எனினும், செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.இந்த முயற்சிக்கு, தடை செய்யப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளை மீறிய செயல் என்று அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT