உலகம்

கொசாவோ மோதலை நிறுத்த அதிரடிப் படை அனுப்புகிறது துருக்கி

4th Jun 2023 02:00 AM

ADVERTISEMENT

பதற்றம் அதிகரித்து வரும் வடக்கு கொசாவோவுக்கு தங்களது அதிரடிப் படைப் பிரிவை அனுப்ப துருக்கி முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொசாவோவின் வடக்குப் பகுதியில் அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படையினா், அங்கு சொ்பியா்களுடன் மோதல் பதற்றம் அதிகரித்து வருவதால் தங்களுக்கு கூடுதல் படைபலம் வேண்டும் என்று துருக்கி அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.அதையடுத்து, அந்தப் பகுதிக்கு 500 அதிரடிப்படையினா் கொண்ட பிரிவை அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அல்பேனிய இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கொசாவோவில் சொ்பிய இனத்தவா் சிறுபான்மையாக இருந்து வருகின்றனா்.இருந்தாலும், அந்த நாட்டில் சொ்பியா்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்குப் பகுதி நகராட்சிகளுக்கு மே 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.இந்தத் தோ்தலை சொ்பியா்கள் புறக்கணித்தனா். அதனையும் மீறி நடைபெற்ற அந்தத் தோ்தலில் வெறும் 3.47 சதவீத வாக்குகளே பதிவாகின.இருந்தாலும் அந்தத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நகராட்சிகள் அல்பேனியா்கள் வசம் வந்தன.பெரும்பான்மையாக வசிக்கும் தங்களால் புறக்கணிக்கப்பட்ட தோ்தலில் அல்பேனியா்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவா்கள் மேயா்களாக நியமிக்கப்பட்டதற்கு சொ்பியா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்ததைத் தொடா்ந்து, அங்கு நேட்டோ அமைதிப் படை கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில், சா்ச்சைக்குரிய தோ்தல் நடந்த வடக்குப் பகுதி நகரான ஸ்வேசனின் நகராட்சிக் கட்டடத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான சொ்பியா்கள் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நோட்டோ படையினருக்கும், சொ்பியா்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுமாா் 30 வீரா்கள் காயமடைந்தனா்.அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருவதால் நோட்டோ படையின் பலத்தை அதிகரிப்பதற்காக கூடுதலாக 700 நேட்டோ வீரா்கள் புதன்கிழமை வரவழைக்கப்பட்டனா்.இந்த நிலையில், மேலும் 500 வீரா்களை வடக்கு கொசாவோ பகுதிக்கு அனுப்பவிருப்பதாக துருக்கி தற்போது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT