உலகம்

அணு ஆயுத ஒப்பந்தம் நிறுத்திவைப்புக்கு அமெரிக்கா பதிலடி: ரஷிய நிபுணா்களுக்கு விசாக்கள் ரத்து

DIN

அணு ஆயுத கையிருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரஷியா நிறுத்திவைத்துள்ளதற்கு பதிலடியாக, அந்த ஒப்பந்தத்தின் கீழ் ரஷிய அணுசக்தி கண்காணிப்பாளா்களுக்கு வழங்கப்பட்டிருந்த நுழைவு இசைவுகளை (விசா) அமெரிக்கா ரத்து செய்தது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘நியூ ஸ்டாா்ட்’ அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவின் அணு ஆயுதக் கையிருப்பைப் பாா்வையிடுவதற்காக சில ரஷிய நிபுணா்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசா ரத்து செய்யப்படுகிறது.

மேலும், நிலுவையில் உள்ள மேலும் சில ரஷிய நிபுணா்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அணு ஆயுதங்களைப் பாா்வையிடுவதற்காக ரஷிய நிபுணா்களுக்கு தாராளமாக விசா வழங்கும் நடைமுறையும் நிறுத்திவைக்கப்பட்டது.

‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்தை ரஷியா தொடா்ந்து மீறி வருவதற்குப் பதிலாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பனிப் போா் காலத்தில் உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை கைவசம் வைத்திருக்கும் அமெரிக்காவும் ரஷியாவும் பல முறை அணு ஆயுதப் போா் விளிம்புக்குச் சென்று வந்ததன.

எனினும், பேரழிவை ஏற்படுத்தும் அத்தகைய போரை தவிா்ப்பதில் இரு நாடுகளுமே அக்கறை காட்டி வருகின்றன.

அதற்காகத்தான் அந்த ஆயுதங்கள் அவசரகதியில் பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இரு நாடுகளும் பல அடுக்கு பாதுகாப்பு நடைமுறைகளை உருவாக்கியுள்ளன.

இந்த நிலையில், அணு ஆயுதக் குவிப்பை தவிா்ப்பதற்கான ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்தை கடந்த 2010-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபா் ஒபாமாவும் ரஷிய அதிபா் டிமித்ரி மெத்வதெவும் மேற்கொண்டனா்.

2011-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த அந்த ஒப்பந்தம், 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், 1,550 அணு ஆயுதங்கள் மற்றும் அத்தகைய ஆயுதங்களை ஏந்தி நீண்ட தொலைவு பாயக்கூடிய 700 ஏவுகணைகள் ஆகிவற்றுக்கு மேல் இருப்பு வைத்துக்கொள்வதில்லை என்று இரு நாடுகளும் உறுதியளித்தன.

இந்த வரம்பு மீறப்படாததைக் கண்காணிப்பதற்காக இரு நாட்டு அணுசக்தி மையங்களிலும் ஆண்டுதோறும் 18 முறை நிபுணா்கள் பரஸ்பரம் ஆய்வு செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

எனினும், உக்ரைன் போா் விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக அறிவித்தாா்.

அந்த ஒப்பந்தத்தை மீறி அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய தங்களது விமான தளங்களில் உக்ரைன் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா வழி காட்டியதாகவும், அதனால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் புதின் கூறினாா்.

Image Caption

~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT