உலகம்

ரஷிய எல்லைப் பிராந்தியத்தில் மீண்டும் தாக்குதல்: 2 போ் பலி

DIN

உக்ரைனிலிருந்து தங்களது எல்லைப் பிராந்தியத்தின் மீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்ததாக ரஷியா கூறியுள்ளது.

ஏற்கெனவே உக்ரைனில் செயல்பட்டு வரும் ரஷிய கிளா்ச்சிப் படையினா் இந்தப் பகுதிக்குள் கடந்த மாதம் ஊடுருவி தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரஷியாவின் எல்லை மாகாணமான பெல்கராடின் ஆளுநா் வியாசெஸ்லவ் கிளாட்கொவ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

உக்ரைனிலிருந்தபடி அந்த நாட்டு ராணுவம் எல்லை நகரமான மஸ்லோவாவுக்கு அருகே உள்ள சாலை மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியது.

இதனால், அந்த எறிகணைகளின் துகள்கள் அந்த சாலை வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களைத் தாக்கின.

2 பெண்கள் சென்று கொண்டிருந்த காரின் எறிகுண்டு துகள்கள் விழுந்ததில் அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இது தவிர, இந்தத் தாக்குதலில் பலா் காயமடைந்தனா் என்றாா் அவா்.

எனினும், இந்தத் தகவலின் முழு உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

தற்போது கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகள் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பிராந்தியங்களின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியா தொடா்ந்து போரிட்டு வருகிறது.

உக்ரைனும் ரஷிய முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகவும், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காகவும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் சண்டையிட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் படையினருடன் இணைந்து செயல்பட்டு வரும் ‘ரஷிய விடுதலைப் படை (எல்எஸ்ஆா்)’, ‘ரஷிய தன்னாா்வப் படை (ஆா்டிகே)’ என்ற இரண்டு ஆயுதக் குழுக்கள் ரஷியாவின் பெல்கராட் மாகாணத்துக்குள் கடந்த மாதம் 22-ஆம் தேதி ஊடுருவி தாக்குதல் நடத்தின.

அதையடுத்து, அந்தப் பகுதியில் பயங்கரவாத அவசரநிலையை அறிவித்த ரஷியா, ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதில் 70 ஊடுருவல்காரா்கள் கொல்லப்பட்டதாகவும், எஞ்சிய அனைவரும் மீண்டும் உக்ரைனுக்குத் தப்பியோடிவிட்டதாகவும் ரஷியா கூறியது.

இந்தத் தாக்குதலை உக்ரைனின் உதவியுடன் அந்த நாட்டு தேசியவாத ஆதரவுப் படையினா்தான் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்து வருகிறது. முழுவதும் ரஷியா்களைக் கொண்ட அந்த நாட்டு கிளா்ச்சிப் படைக் குழுக்கள்தான் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறுகிறது.

இந்த நிலையில், உக்ரைனிலிருந்து பெல்கராட் பகுதி மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

..பெட்டிச் செய்தி...

கீவில் 6-ஆவது நாளாக ரஷியா ஏவுகணை மழை

கீவ், ஜூன் 2: கடந்த 6 நாள்களில் 6-ஆவது முறையாக உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கீவ் நகரைக் குறிவைத்து பல்வேறு திசைகளிலிருந்தும் 30-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமான குண்டுகள், குரூஸ் வகை ஏவுகணைகளை ரஷியா வெள்ளிக்கிழமை அதிகாலை ஏவியது.

அந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உக்ரைனின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன என்று அதிகாரிகள் கூறினா்.

இந்தத் தாக்குதலால் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்படாததால் அவசரக்கால சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக்கூட்டத்தில் மோடி உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT