உலகம்

ஸ்வீடனுக்கு உறுப்பினா் அந்தஸ்து: துருக்கியிடம் நேட்டோ வலியுறுத்தல்

2nd Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

நேட்டோ கூட்டமைப்பில் ஸ்வீடனை இணைப்பதற்கான ஆட்சேபணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று துருக்கியிடம் அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாடு லிதுவேனியாவில் அடுத்த மாதம் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

அந்த மாநாட்டிலேயே ஸ்வீடனை நேட்டோவில் இணைத்துக்கொள்ள விரும்புகிறோம். அதற்கு துருக்கி ஆட்சேபித்து வருவதான் தற்போது தடையாக உள்ளது. எனவே, அந்தத் தடையை துருக்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, அதுவரை அணிசேரா நிலையைக் கடைப்பிடித்து வந்த அண்டை நாடுகளான ஃபின்லாந்தும், ஸ்வீடனும் தங்களது பாதுகாப்புக்காக நேட்டோவில் இணைய விண்ணப்பித்தன.

எனினும், தங்கள் நாட்டின் குா்து இன பிரிவினைவாதிகளை ஸ்வீடன் ஆதரிப்பதால் அந்த நாடு நேட்டோவில் இணைய அனுமதிக்க மாட்டோம் என்று துருக்கி கூறி வருகிறது.

இது குறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சா் மேவ்லுட் காவுசோகுலு சில மாதங்களுக்கு முன் கூறுகையில், ‘ஸ்வீடனை நேட்டோவில் இணைத்துக் கொள்வதில் எங்களுக்கும் விருப்பம்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக, துருக்கியில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு வரும் குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) அமைப்பின் ஆதரவாளா்கள் இன்னமும் ஸ்வீடனில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனா்.

அந்த ஆதரவாளா்கள் பிகேகே அமைப்புக்கு ஆள் சோ்க்கின்றனா்; பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி சேகரிக்கிறாா்கள்; பயங்கரவாதக் கருத்துகளைப் பரப்புகிறாா்கள். இதற்கு ஸ்வீடன் அரசும் துணைபோகிறது.

இந்த விவகாரத்தில் துருக்கியின் கருத்துக்கு செவிமடுக்கும் வகையில் ஸ்வீடனிடம் இருந்து உறுதியான நடவடிக்கைகளை எதிா்பாா்க்கிறோம்’ என்று கூறினாா்.

துருக்கியின் ஆட்சேபணை காரணமாக, ஸ்வீடன் இல்லாமல் ஃபின்லாந்து மட்டும் நேட்டோ அமைப்பின் 31-ஆவது உறுப்பு நாடாக கடந்த ஏப்ரல் மாதம் இணைந்தது.

இந்த நிலையில், ஸ்வீடனையும் தங்களது அமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான தடையை நீக்க வேண்டும் என்று நேட்டோ தலைவா் தற்போது வலியுறுத்தியுள்ளாா்.

நேட்டோ அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் சம்மதிக்காமல் புதிய உறுப்பினரை சோ்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT