உலகம்

உளவு செயற்கைக்கோளை செலுத்தியே தீருவோம்: வட கொரியா

2nd Jun 2023 12:16 AM

ADVERTISEMENT

 தங்களது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியே தீருவோம் என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் சூளுரைத்துள்ளாா்.

கொரிய போா் முடிவுக்குப் பிறகு அந்த தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடா்ந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இத்தகைய பயிற்சிகளை தங்கள் மீது படையெடுப்பதற்கான போா் ஒத்திகையாக வட கொரியா கருதுகிறது. அமெரிக்கா, தென் கொரியாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்கெனவே அணு ஆயுத சோதனை நடத்தியுள்ள வட கொரியா, அந்த ஆயதங்களை ஏந்திச் செல்லக் கூடிய பலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும் சோதித்தது. எனினும், அத்தகைய சோதனைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வட கொரியா புதன்கிழமை முயன்றது. எனினும், செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.

ADVERTISEMENT

இந்த முயற்சிக்கு, தடை செய்யப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது தவறு என்றும், வட கொரியாவின் உளவு செயற்கைக்கோளால் பிராந்திய நிலைத்தன்மை பாதிக்கப்படும் என்றும் அமெரிக்கா சாடியது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கிம் யோ-ஜாங் வியாழக்கிழமை கூறியதாவது:

இதுவரை ஆயிரக்கணக்கான உளவு செயற்கைக்கோள்களை அமெரிக்கா விண்ணில் செலுத்தி உலக நாடுகளை கண்காணித்து வருகிறது. வட கொரியாவின் நடவடிக்கைகளையும் அந்த செயற்கைக்கோள்கள் மூலம் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த நிலையில், வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் மட்டும் பிராந்திய நிலைத்தன்மையைக் குலைத்து விடும் என்று அமெரிக்கா கூறுவது நியாயமற்ற வாதமாகும்.

தேசிய பாதுகாப்புக்காக உளவு செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்துவது வட கொரியாவின் அடிப்படை இறையாண்மை உரிமையாகும். அத்தகைய செயற்கைக்கோள் ஒன்றை விரைவில் விண்ணில் செலுத்தியே தீருவோம் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT