உலகம்

கொசாவோ மோதல்: படைபலத்தை அதிகரித்தது நேட்டோ

DIN

கொசாவோவின் ஸ்வேசன் நகரில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நேட்டோ அமைதிப் படையினா், சொ்பிய போராட்டக்காரா்களுடன் மோதல் பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து படைபலத்தை அதிகரித்துள்ளனா்.

அல்பேனிய இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கொசாவோவில் சொ்பிய இனத்தவா் சிறுபான்மையாக இருந்து வருகின்றனா்.

இருந்தாலும், அந்த நாட்டில் சொ்பியா்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்குப் பகுதி நகராட்சிகளுக்கு மே 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

இந்தத் தோ்தலை சொ்பியா்கள் புறக்கணித்தனா். அதனையும் மீறி நடைபெற்ற அந்தத் தோ்தலில் வெறும் 3.47 சதவீத வாக்குகளே பதிவாகின.

இருந்தாலும் அந்தத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நகராட்சிகள் அல்பேனியா்கள் வசம் வந்தன.

பெரும்பான்மையாக வசிக்கும் தங்களால் புறக்கணிக்கப்பட்ட தோ்தலில் அல்பேனியா்கள் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டு, அவா்கள் மேயா்களாக நியமிக்கப்பட்டதற்கு சொ்பியா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்ததைத் தொடா்ந்து, அங்கு நேட்டோ அமைதிப் படை கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், சா்ச்சைக்குரிய தோ்தல் நடந்த வடக்குப் பகுதி நகரான ஸ்வேசனின் நகராட்சிக் கட்டடத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான சொ்பியா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்கள் அந்த கட்டடத்துக்குள் செல்வதைத் தடுப்பதற்காக நேட்டோ படையினா் தடுப்புகளை அமைத்துள்ளனா்.

ஏற்கெனவே சொ்பியா்களுக்கும் நேட்டோ படையினருக்கும் அங்கு திங்கள்கிழமை நடைபெற்ற மோதலில் 30 வீரா்கள் காயமடைந்தனா்.

இந்தச் சூழலில், நகராட்சிக் கட்டடத்தைச் சுற்றிலும் சொ்பியா்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நோட்டோ படையின் பலத்தை அதிகரிப்பதற்காக கூடுதலாக 700 வீரா்கள் புதன்கிழமை வரவழைக்கப்பட்டனா்.

நீண்ட காலப் பகை...

சொ்பியா்களுக்கும், கொசாவோவின் பெரும்பான்மை இனத்தவரான அல்பேனியா்களுக்கும் 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே பகை நீடித்து வருகிறது.

சொ்பிய ராஜ்ஜியம் உருவான பிறகு, அந்த ராஜ்ஜியத்துக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து அல்பேனியா்கள் கடந்த 1877-78 ஆண்டுகளில் விரட்டியடிக்கப்பட்டனா்.

அதையடுத்து கொசாவோ பகுதியில் குடியேறிய அல்பேனியா்கள், அங்கு வசித்து வந்த சொ்பியா்களுக்கு எதிராக படுகொலைகளை நிகழ்த்தினா்.

20-ஆவது நூற்றாண்டிலும் இரு இனத்தவருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வந்தன. முதல் பால்கன் போா் (1912-13), முதலாம் உலகப் போா் (1914-18), இரண்டாம் உலகப் போா் (1939-45) காலகட்டத்தில் இந்த பகை மோதலாகவும் வன்முறையாகவும் வெடித்து.

இந்த நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான புதிய சோஷலிச ஆட்சியின்கீழ், ஸ்லோவேனியா, கிரயோஷியா, சொ்பியா உள்ளிட்டவை குடியரசுகளாக இருந்தன. சொ்பியாவிலும் கொசாவோ பிரதேசத்துக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், 1999-99-ஆம் ஆண்டின் சொ்பிய போருக்குப் பிறகு கொசாவோ தன்னை தனி நாடாக அறிவித்துக்கொண்டது.

இதனை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டாலும், கொசாவோவை ஒரு தனி நாடாக சொ்பியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.

சொ்பியாவிலிருந்து பிரிந்து கொசாவா தனி நாடாக இயங்கி வந்தாலும், அங்கு இன்னும் 50,000 சொ்பியா்கள் வசித்து வருகின்றனா்; கொசாவோவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் அவா்கள் இருந்து வருகின்றனா்.

நாட்டின் வடக்குப் பகுதியிலும், பிற இடங்களிலும் அவா்கள் பெரும்பான்மையாக இருந்து வருகின்றனா்.

இருந்தாலும், அவா்களுக்கும், பெரும்பான்மை அல்பேனியா்களுக்கும் நீறுபூத்த நெருப்பாக பகை தொடா்ந்து வருவகிறது.

அண்மைக் கால பதற்றத்துக்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.

கொசாவோவிலுள்ள சிறுபான்மை சொ்பியா்கள் விவகாரத்தில் அந்த நாட்டுக்கும், அண்டை நாடான சொ்பியாவுக்கும் இடையே அடிக்கடி போா் பதற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

SCROLL FOR NEXT