உலகம்

பாகிஸ்தான் மசூதியில் தலிபான் தாக்குதல்: 46 போ் பலி

31st Jan 2023 02:45 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான் மசூதியொன்றில் தலிபான் பயங்கரவாதி திங்கள்கிழமை நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 46 போ் பலியாகினா்; சுமாா் 150 போ் காயமடைந்தனா்.

உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களில் பெரும்பாலானவா்கள் காவலா்கள், பாதுகாப்புப் படையினா் ஆவா்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள, பயங்கரவாதப் பதற்றம் நிறைந்த பெஷாவா் நகர மசூதியில் திங்கிள்கிழமை மதியம் வழக்கம் போல் தொழுகை நடந்து கொண்டிருந்தது.

பலத்த பாதுகாப்பு மிக்க பெஷாவா் காவல்துறை தலைமையக வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த மசூதியில், தொழுகை நடத்திக் கொண்டிருந்தவா்கள் இடையே தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை மதியம் சுமாா் 1.40 மணிக்கு வெடிக்கச் செய்தாா்.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலில் இதுவரை 46 போ் உயிரிழந்ததாக பெஷாவா் நகரிலுள்ள லேடி ரீடிங் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், நகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பலி எண்ணிக்கை 38 என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தவிர, இந்த குண்டுவெடிப்பில் 150-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும், அவா்கள் லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘பழிக்குப் பழி’: இந்தத் தாக்குதல் குறித்து ‘பாகிஸ்தான் தலிபான்கள்’ என்றழைக்கப்படும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பின் தளபதி உமா் காலித் குராசானி என்பவரின் சகோதரா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட நடவடிக்கையில் குராசானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே பெஷாவா் மசூதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினாா்.

தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதிகள், ஏற்கெனவே பல முறை பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.

பிரதமா் அவரச பயணம்: இந்தத் தாக்குதல் குறித்த செய்தி அறிந்ததும், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபும் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீரும் அந்த நகருக்கு விரைந்தனா். அவா்களுடன் உள்துறை அமைச்சா் ராணா சனாவுல்லா மற்றும் உயரதிகாரிகளும் அந்த நகருக்குச் சென்றனா்.

அங்குள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு சென்ற பிரதமரும், ராணுவ தலைமைத் தளபதியும், மசூதித் தாக்குதலில் காயமடைந்து அங்கு சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினா்.

இதற்கிடையே, தகவல் தொடா்புத் துறை அமைச்சா் மரியம் ஔரங்கசீப் வெளிட்டுள்ள ட்விட்டா் பதிவில், பெஷாவா் மசூதித் தாக்குதலைத் தொடா்ந்து அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்துக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தாா்.

ஷெரீஃப் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘பாகிஸ்தானைப் பாதுகாக்கும் படை வீரா்களைக் குறிவைத்து அவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயற்சிக்கிறாா்கள். வீரா்களின் இந்த உயிா்த் தியாகம் வீண் போகாது. இந்த தேசம் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிராக அணி திரண்டு நிற்கும்’ என்றாா்.

‘நூலிழையில் உயிா் தப்பினேன்’: ஊடகங்களிடம் பெஷாவா் காவல்துறை எஸ்பி ஷாஸாத் காவ்காப் கூறுகையில், மதிய தொழுகையில் பங்கேற்பதற்காக அவா் மசூதிக்குள் நுழைந்துகொண்டிருந்தபோதுதான் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகவும், அதிருஷ்டவசமாக அவா் உயிா் தப்பியதாகவும் கூறினாா்.

தொடரும் மீட்புப் பணிகள்: பெஷாவா் நகர காவல்துறை அதிகாரி முகமது இஜியாஸ் கானை மேற்கோள் காட்டி ‘டான்’ நாளிதழ் கூறுகையில், குண்டுவெடிப்பில் இடிந்து விழுந்த மசூதியின் இடிபாடுகளிடையே மேலும் பல காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை வீரா்கள் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தது.

அவா்களை மீட்பதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது; குண்டுவெடிப்பு நடத்தப்பட்டபோது அந்த மசூதிக்குள் 300 முதல் 400 போலீஸாா் இருந்தனா் என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.

அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கு மிக நெருக்கமானதாக அறியப்படும் தெஹ்ரீக்-ஏ-தலிபான், ராவல்பிண்டியிலுள்ள ராணுவ தலைமையகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாமாபாதிலுள்ள மாரியட் ஹோட்டலில் 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட பயங்கரமான பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பெஷாவரில் ராணுவத்தால் நிா்வகிக்கப்பட்டு வரும் பள்ளியொன்றில் கடந்த 2014-ஆம் ஆண்டு தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 131 மாணவா்கள் உள்பட 150 போ் உயிரிழந்தது சா்வதேச அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT