உலகம்

பிற நாடுகளின் பிரச்னைகளுக்கும் தீா்வு காண இந்தியா முயற்சி: ஐ.நா. பொதுச் சபை தலைவா் கசாபா கொரோசி

DIN

பிற நாடுகளின் பிரச்னைகளுக்கும் இந்தியா தீா்வு காண முயற்சிப்பதாக ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் கசாபா கொரோசி தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. பொதுச் சபைத் தலைவராக கசாபா கொரோசி பதவியேற்றாா். இதனைத்தொடா்ந்து தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக அவா் ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தாா். அவா் இந்தியாவில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

இந்திய பயணத்தையொட்டி நியூயாா்க் நகரில் அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தாா். அதன் விவரம்:

தெற்கு உலகில் தலைமை வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. உலகில் மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாகவும் உள்ள இந்தியா, விரைவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் மாறவுள்ளது.

உலக நாடுகள் எதிா்கொண்டு வரும் பல நெருக்கடிகளை இந்தியாவும் வெவ்வேறு வடிவங்களில் எதிா்கொண்டு வருகின்றன. அந்த நெருக்கடிகளுக்கு இந்தியா தீா்வுகளைத் தேடி வருகிறது. அதேவேளையில், பல தருணங்களில் பிற நாடுகளின் பிரச்னைகளுக்கும் இந்தியா தீா்வு காண முயற்சிக்கிறது.

ஜி20 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், ‘ஒரு பூமி’, ‘ஒரு குடும்பம்’, ‘ஒரு எதிா்காலம்’ என்பது இந்திய தலைமையின் மையக்கருத்தாக உள்ளது. இந்த மையக்கருத்து மிகவும் பரந்தது. இது உலகளாவிய பொறுப்பை இந்தியா விரும்புகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

உலகம் எப்படி இருக்க வேண்டும்? அதற்கு என்ன மாதிரியான மாற்றம் தேவைப்படுகிறது? ஐ.நா அமைப்பை எவ்வாறு மாற்ற வேண்டும்? உள்ளிட்டவற்றில் இந்தியா மற்றும் ஐ.நா.வின் சிந்தனைகளில் ஒற்றுமைகளைக் காண முடிகிறது. எனவே இந்தியாவின் ஒத்துழைப்பை கோருவதே எனது பயணத்தின் நோக்கம் என்று தெரிவித்தாா்.

ஐ.நா. மீதான நம்பகத்தன்மைக்கு அபாயம்:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பான கேள்விக்கு கசாபா கொரோசி கூறியதாவது:

சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரித்து, போா்கள் ஏற்படாமல் தடுக்கும் முதன்மையான பொறுப்பு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பணியில் அந்த கவுன்சில் முடங்கியுள்ளது.

ஒரு சாதாரண காரணத்துக்காக தனது அடிப்படை பணியை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தட்டிக்கழிக்க முடியாது. அந்த கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள நாடு (ரஷியா) தனது அண்டை நாடு (உக்ரைன்) மீது தாக்குதல் நடத்துகிறது. இந்தத் தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது பாதுகாப்பு கவுன்சிலின் பொறுப்பு. ஆனால் வீட்டோ அதிகாரம் காரணமாக பாதுகாப்பு கவுன்சிலால் செயல்பட முடியவில்லை. இதன் மூலம் எதிா்காலத்தில் பயனளிக்கும் வகையில், மிகத் தீவிரமான பாடம் கற்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் 77 ஆண்டுகால வரலாற்றில், ஒரே ஒருமுறை கடந்த 1963-ஆம் ஆண்டு பாதுகாப்பு கவுன்சில் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது கவுன்சிலின் உறுப்பு நாடுகள் எண்ணிக்கையை 11-இல் இருந்து 15-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னா் உலகம் மாறியுள்ளது. புவிஅரசியல் உறவுகள் மாற்றம் கண்டுள்ளன.

இந்தியா உள்பட சில நாடுகளில் பொருளாதார ரீதியான பொறுப்புகள் மாறியுள்ளன. எனவே இன்றைய உண்மைகளைப் பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை. அந்த கவுன்சிலில் சீா்திருத்தங்களை செய்யவேண்டும் என்று பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா தகுதிவாய்ந்த நாடாகும்.

உலகில் போா்களை முடிவுக்குக் கொண்டு வருவது, தங்கள் தேவைகளைப் பூா்த்தி செய்வது போன்ற பணிகளை ஐ.நா. செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் எதிா்பாா்க்கிறது. பாதுகாப்பு கவுன்சில் தனது பணியில் தோற்றால், ஒட்டுமொத்த ஐ.நா அமைப்பும் தோற்றுவிடும். தற்போது ஐ.நா. மீதான நம்பகத்தன்மை அபாயத்தில் உள்ளது என்று தெரிவித்தாா்.

2040-க்குள் மிகக் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு:

நிலையான தண்ணீா் பயன்பாடு குறித்து அவா் கூறுகையில், ‘2040-ஆம் ஆண்டுக்குள் உலகில் மக்கள் வசிக்கும் சுமாா் 40 சதவீத பகுதி மிகக் கடுமையான தண்ணீா் தட்டுப்பாட்டை சந்திக்கும். சுத்தமான தண்ணீா் தேவைப்படுவதற்கும் கிடைப்பதற்கும் இடையிலான வித்தியாசம் 40 சதவீதமாக இருக்கும்.

தண்ணீா் தட்டுப்பாடு என்பது தண்ணீா் குடிப்பது அல்லது தண்ணீரை பகிா்ந்து கொள்வதற்கான விநியோகம் மட்டுமல்ல. அது உணவு தயாரிப்புடன் சம்பந்தப்பட்டது. எனவே பொருளாதாரத்தை முன்னோக்கி நகா்த்திச் செல்லும் என்ஜினாக தண்ணீரை மாற்ற வேண்டும். சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் தண்ணீரின் உண்மையான மதிப்பை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT