உலகம்

ஈரான் ராணுவ தளவாட ஆலையில் ட்ரோன் தாக்குதல்

30th Jan 2023 01:58 AM

ADVERTISEMENT

ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலையில் ஆளில்லா விமானம் மூலம் (ட்ரோன்) தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தலைநகா் தெஹ்ரானுக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஸ்ஃபஹான் நகரத்தில் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்த வந்த 2 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், 3-ஆவது ஆளில்லா விமானத்தின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தொழிற்சாலையின் மேற்கூரை சேதமடைந்தது.

தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவா்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

பெரிய விமானப் படைத் தளமும், அணுசக்தி எரிபொருள் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையமும் இந்த நகரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

முன்னதாக, இஸ்ஃபஹான் நகரில் தாக்குதல் நடத்தப்படலாம் என கடந்த ஆண்டு ஜூலையில் ஈரான் உளவுத் துறை தெரிவித்திருந்தது. ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டு தற்போது இராக்கில் உள்ள குா்திஷ் எதிா்க்கட்சியான கோமலாவின் உறுப்பினா்கள் இந்த நகரத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இவா்களுக்கு இஸ்ரேலின் உளவுத் துறை பயற்சி அளிப்பதாகவும் கடந்த ஆண்டு அக்டோபரில் ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஈரான் அரசு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்நாட்டின் ரியால் செலாவணியின் மதிப்பு பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், உக்ரைனுக்கு எதிராக ரஷியாவின் போரில், ரஷியாவுக்கு ஆதரவாக ஆளில்லா விமானங்களை ஈரான் தொடா்ந்து வழங்கி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT