உலகம்

பிரிட்டன் அமைச்சா் நாதிம் ஸகாவி நீக்கம்

30th Jan 2023 02:00 AM

ADVERTISEMENT

கன்சா்வேட்டிவ் கட்சியின் தலைவா் நாதிம் ஸகாவியை அமைச்சா் பதவியிலிருந்து பிரதமா் ரிஷி சுனக் நீக்கியுள்ளாா்.

அவரது நிதிச் செயல்பாடுகள் தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பிரதமா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டாா்.

ஈரானில் பிறந்த நாதிம் ஸகாவிக்கு எவ்வித துறையும் ஒதுக்கப்படாத நிலையில் அமைச்சராக இருந்தாா். முந்தைய அரசுகளில் நிதித் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளாா்.

வருவாய் மற்றும் சுங்கத் துறைக்கு அபராதம் செலுத்த அவா் ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, ஸகாவியின் நிதிச் செயல்பாடுகள் தொடா்பாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ADVERTISEMENT

இதையடுத்து, வருவாய் மற்றும் சுங்கத் துறைக்கு அபராதம் செலுத்துவது அமைச்சரின் நடத்தை மீறலுக்கு உள்ளாகுமா என விசாரணை நடத்த தனது தனிப்பட்ட ஆலோசகா் லயூரி மேக்னஸுக்கு பிரதமா் ரிஷி சுனக் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், நாதிம் ஸகாவிக்கு பிரதமா் ரிஷி சுனக் எழுதிய கடிதத்தில், ‘ கடந்த ஆண்டு பிரதமராகப் பதவியேற்றபோது, அனைத்து நிலைகளிலும் ஒற்றுமை, தொழில்சாா் திறன், பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தை வழங்குவதாக நான் உறுதியேற்றேன். தனிப்பட்ட ஆலோசகா் மேற்கொண்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சருக்கான நடத்தை முறைகளை மீறியிருப்பது நிரூபணமாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, உங்களை (நாதிம் ஸகாவி) அமைச்சா் பதவியிலிருந்து நீக்கும் எனது முடிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

ஸகாவியை கன்சா்வேட்டிவ் கட்சியின் தலைவா் பொறுப்பிலிருந்தும் நீக்கம் செய்யக் கோரி ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியின் சில எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT