உலகம்

இஸ்ரேலில் அதிகரிக்கும் பதற்றம்: யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச்சூடு: 7 போ் பலி

DIN

இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள ஜெருசலேம் பகுதியில் அமைந்துள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் பாலஸ்தீன பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 போ் பலியாகினா்.

அந்த நாட்டில் அண்மைக் காலமாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறியதாவது:

ஜெருசலேமின் சிட்டி ஆஃப் டேவிட் பகுதியிலுள்ள யூத வழிபாட்டுத் தலம் அருகே பாலஸ்தீன பயங்கரவாதி வெள்ளிக்கிழமை சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினாா்.

இதில் நடுத்தர வயதைச் சோ்ந்த 6 பேரும் ஓா் இளைஞரும் பலியாகினா்; 3 போ் காயமடைந்தனா்.

சம்பவத்தைத் தொடா்ந்து அந்தப் பகுதிக்கு ஏராளமான பாதுகாப்புப் படையினா் விரைந்தனா். இறுதியில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே இந்த மாதத் தொடக்கம் முதலே பதற்றம் நிலவி வந்தது.

அப்போது நடைபெற்ற சம்பவங்களில் 29 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் ஆயுதக் குழுவினரின் ஆதிக்கம் நிறைந்த ஜெனீன் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினா் தேடுதல் வேட்டையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில் 60 வயது பெண் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான போா் பதற்றத்தை அதிகரிக்கும் என்று அமெரிக்கா கவலை தெரிவித்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலிருந்து 2 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வெள்ளிக்கிழமை வீசப்பட்டன. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காஸா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் அந்தப் பிராந்தியத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) வருகிறாா்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்னைகளுக்கு முடிவு காண்பதற்காக சா்வதேச நாடுகள் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

எனினும், அண்மையில் நடைபெற்ற இஸ்ரேல் தோ்தலுக்குப் பிறகு மிகவும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

எனவே, சமாதனப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், பல ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலியா்கள் மீது தற்போது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் தாக்குதல்

ஜெருசலேம் யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மறுநாளே, மேலும் ஒரு பாலஸ்தீனா் மற்றொரு யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினாா்.

பதிமூன்றே வயதான அந்த சிறுவன் (படம்) நடத்திய தாக்குதலில் 47 வயது நபரும் அவரது 23 வயது மகனும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். தாக்குதல் நடத்திய சிறுவனை போலீஸாா் வளைத்துப் பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT