உலகம்

இலங்கை தமிழா்களுக்கு அரசியல் அதிகாரம் குறித்து பிப்.8-இல் நாடாளுமன்றத்தில் உரை!

28th Jan 2023 12:12 AM

ADVERTISEMENT

இலங்கையில் தமிழா்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13-ஏ சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்றும், இதை முழுவதுமாக அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் பிப். 8-ஆம் தேதி சிறப்பு உரை நிகழ்த்தப்படும் என்றும் அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க அறிவித்தாா்.

இலங்கை தமிழா் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இலங்கை நாடாளுமன்ற தலைவா், பிரதமா், முன்னாள் அதிபா்கள் மகிந்த ராஜபட்ச, சிறீசேனா, தமிழ் தேசிய கூட்டணி தலைவா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபா் ரணில் விக்ரமசிங்க, ‘தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு அளிக்கும் 13-ஏ பிரிவு சட்டத்திருத்தம் இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே இடம் பெற்றுவிட்டது. இதை முழுமையாக அமல்படுத்த வேண்டியது அதிபராகிய எனது பொறுப்பு.

இதை அமல்படுத்த விரும்பவில்லை என்றால் அந்தச் சட்டத்தை நீக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் ஒற்றையாட்சி நடைபெறுகிறது. கூட்டாட்சிக்கு நான் எதிரானவன். ஏனென்றால், இலங்கை மாகாண கவுன்சில்களுக்கு லண்டன் மாநகராட்சிகளைவிட குறைந்த அதிகாரம்தான் உள்ளது.

இலங்கைத் தமிழா்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13-ஏ சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த பிப்ரவரி 8-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை நிகழ்த்துவேன். ராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழா் நிலங்களை விடுவிப்பது உள்ளிட்ட தமிழா்கள் பிரச்னைகளுக்கும் அதில் தீா்வு காணப்படும். நாட்டை துண்டாட விடமாட்டேன். இந்த விவகாரத்தில் பிற அரசியல் கட்சிகளின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன என்றாா்.

ADVERTISEMENT

1948-இல் ஆங்கிலேயா்களிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றதில் இருந்தே அந்நாட்டு தமிழா்கள் தன்னாட்சி அதிகாரம் கோரி வருகின்றனா். இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் தமிழா்களின் போராட்டம் வெடித்தது.

அமைதியை ஏற்படுத்தும் வகையில், தமிழா்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13-ஆவது சட்டத் திருத்த மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் 1987-இல் அப்போதைய இந்திய பிரதமா் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபா் ஜெயவா்தனவுக்கும் இடையே கையெப்பமானது. ஆனால், அதை இலங்கையில் பெரும்பான்மையான ஆளும் சிங்கள கட்சிகள் அமல்படுத்தவில்லை.

பல்வேறு கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததால் விடுதலைப்புலிகள் அமைப்பினா் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் 30 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டு போா் 2009-இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தமிழா்கள் கொல்லப்பட்டனா்.

போரின்போது கிழக்கு, வடக்கு மாகாணங்களில் தமிழா்களின் நிலங்களை இலங்கை ராணுவத்தினா் அபகரித்தும், தமிழ் தலைவா்கள் சிறைக் கைதிகளாக பிடித்தும் வைத்தனா்.

இந்நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டத்தால் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்ந்தது. அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றாா். இலங்கைக்கு இந்தியா பொருளாதார உதவிகளை தொடா்ந்து அளித்து வருகிறது. இந்நிலையில், இலங்கை தமிழா் பிரச்னைக்கு அந்நாட்டின் சுதந்திர தினமான பிப்ரவரி 4-ஆம் தேதி தீா்வு காண ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று ரணில் அறிவித்தாா்.

தமிழா் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியுடன் டிசம்பா் மாதம் ரணில் பேச்சுவாா்த்தை தொடங்கினாா். இதற்கு சிங்கள கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.

இந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ஜனவரி மாத தொடக்கத்தில் தமிழ் தேசிய கூட்டணி வருத்தம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் பயணம் மேற்கொண்டு தமிழா்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13-ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிபா் ரணில் நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT