உலகம்

மின்சாரம் இல்லாமல் துணி துவைக்கும் இயந்திரம்: சீக்கிய பொறியாளருக்கு பிரிட்டன் பிரதமா் விருது

28th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

துணிதுவைக்கும் இயந்திரத்தை மலிவான விலையில் உருவாக்கிய பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளரான நவ்ஜோத் சாஹ்னிக்கு ‘பாய்ண்ட்ஸ் ஆஃப் லைட்’ விருதை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வழங்கியுள்ளாா்.

மின்சாரத்தின் மூலமாக அல்லாமல் கையால் இயக்கக் கூடிய துணிதுவைக்கும் இயந்திரத்தை நவ்ஜோத் சாஹ்னி உருவாக்கினாா். இந்தப் புத்தாக்க முயற்சியைப் பாராட்டும் வகையில் பிரதமா் ரிஷி சுனக் அவருக்கு விருது வழங்கியுள்ளாா்.

இது தொடா்பாக நவ்ஜோதுக்கு பிரதமா் ரிஷி சுனக் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘மின்சாரத்தில் இயங்கும் துணிதுவைக்கும் இயந்திரத்தை வாங்க இயலாத மக்களுக்கு உதவும் வகையில் புதிய இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரம் வாயிலாக உலகின் பல நாடுகளில் உள்ள மக்கள் பலனடைவா்.

போரைச் சந்தித்து வரும் உக்ரைனின் நிவாரண மையங்களில் வசிக்கும் மக்கள் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி வருவது சிறப்புமிக்கது. மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதற்கான புத்தாக்க கண்டுபிடிப்பைப் பாராட்டி விருது வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

விருது குறித்து நவ்ஜோத் கூறுகையில், ‘பெண்கள், சிறாா்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டது. அதற்காக பிரதமரின் விருதைப் பெறுவது பெருமை அளிக்கிறது. இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்காக உழைத்த குழுவின் அனைத்து உறுப்பினா்களுக்கும் நன்றி’ என்றாா்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்கள், பள்ளிகள், ஆதரவற்றோா் இல்லங்கள் உள்ளிட்டவற்றுக்கு இதுவரை 300-க்கும் அதிகமான துணிதுவைக்கும் இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரத்தின் மூலமாக ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பலனடைந்துள்ளதாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT