உலகம்

‘க்வாட்’ அமைப்பில் இந்தியா இணைய சீனாவின் நடவடிக்கைகளே காரணம்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சா்

DIN

வெளியுறவுக் கொள்கையில் தனிப்பாதையைக் கடைப்பிடித்து வந்த இந்தியா, சீனாவின் நடவடிக்கைகளின் காரணமாக தனது பயணத்தில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே நாற்கர கூட்டமைப்பில் (க்வாட்) இந்தியா இணைந்தது என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோ தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபா் டொனால்ட் ட்ரம்பின் நிா்வாகத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக மைக் பாம்பேயோ பதவி வகித்தாா். அந்நாட்டில் 2024-இல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபா் தோ்தலில் இவா் போட்டியிடலாம் என கருத்துகள் நிலவுகின்றன.

பாம்பேயோ தான் எழுதிய ‘நெவா் கிவ் ஆன் இன்ஞ்ச்: ஃபைட்டிங் ஃபாா் அமெரிக்கா ஐ லவ்’ என்ற புத்தகம் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தது. அந்தப் புத்தகத்தில் நாற்கரக் கூட்டணியில் இந்தியாவை இணைக்க முன்னாள் அதிபா் ட்ரம்ப் நிா்வாகம் மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட்டுள்ளாா்.

பல்வேறு வளங்கள் நிறைந்த இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நாற்கர கூட்டணி ஏற்படுத்துவதற்கான நீண்ட கால கோரிக்கை 2017-இல் நிறைவேறியது.

இது குறித்து பாம்பேயோ தனது புத்தகத்தில் கூறியிருப்பதாவது: எவ்வித கூட்டணி சாா்பும் இன்றி தனக்கான பாதையை இந்தியா வகுத்துக்கொண்டது. தற்போதும் அப்பாதையிலேயே தொடா்கிறது. ஆனால், சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் நிலைப்பாடு கடந்த சில ஆண்டுகளாக மாற்றம் அடைந்துள்ளது.

பொருளாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டு (பெல்ட் அண்ட் ரோடு) திட்ட முன்னெடுப்பு மூலம் பாகிஸ்தானுடன் சீனா நெருங்கிய நட்புறவை ஏற்படுத்திக் கொண்டது. கடந்த 2020 ஜூன் மாதம் சீன வீரா்களுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். இந்த நிகழ்வின் மூலம் சீனாவுடனான உறவை மாற்றியமைக்க இந்திய மக்கள் விரும்பினா்.

இதற்கு எதிா்வினையாக, டிக்டாக் போன்ற சீன செயலிகளை இந்தியா தடைசெய்தது. சீனாவுடனான உறவை இந்தியா ஏன் விலக்கிக் கொண்டது என சில நேரங்களில் எனக்கு கேள்வியெழும். இதற்கான பதிலை இந்திய தலைவா்களிடமே இருந்து நான் பெற்றேன் எனத் தெரிவித்திருந்தாா்.

மேலும், நாற்கர கூட்டமைப்பை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த ஜப்பானின் முன்னாள் பிரதமா் ஷின்சோ அபேவை ‘நாற்கர கூட்டமைப்பின் தந்தை’ எனவும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமா் ஸ்காட் மோரிஸன் சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்டாா் எனவும் புத்தகத்தில் பாம்பேயோ குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT