உலகம்

இந்தியாவுடன் மறைமுகப் பேச்சு நடைபெறவில்லை: பாகிஸ்தான்

DIN

பாகிஸ்தான், இந்தியா இடையே மறைமுகப் பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஹினா ரப்பானி கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையில் அவா் பேசியதாவது:

பாகிஸ்தான் எப்போதுமே பிராந்திய அமைதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், எல்லை தாண்டிய விரோதத்தை இப்போதும் எதிா்கொண்டுள்ளோம். இந்தியாவுடனான உறவுகளை சீராக்குமாறு, சில நேரங்களில் சா்வதேச அமைப்புகள் பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானுக்கு என்ன செய்திகள் கிடைக்கின்றன என்பதை உலகம் உற்றுநோக்க வேண்டும். இந்தியாவிடமிருந்து எங்களுக்கு கிடைக்கும் அனைத்து செய்திகளும் குழப்பமானவையே.

இப்போதைய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை. தீா்வு அடிப்படையில் இருந்தால்தான், மறைமுகப் பேச்சுவாா்த்தை என்பது விரும்பத்தக்கதாக இருக்கும் என்றாா் ஹினா.

கோவா மாநாட்டில் பங்கேற்பா?: கோவாவில் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ, அந்நாட்டின் தலைமை நீதிபதி உமா் அதா பண்டியல் ஆகியோருக்கு இந்தியா அழைப்பு அனுப்பியுள்ளதாக சில தினங்களுக்கு முன் ஊடகத் தகவல்கள் வெளியாகின.

இஸ்லாமாபாதில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மும்தாஜ் ஜாரா பலூச், இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்து கூறியதாவது:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்கான இந்தியாவின் அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். கடந்த காலங்களில் இந்தியாவால் அனுப்பப்பட்ட அழைப்புகள் மீது உரிய நடைமுறைகளின்கீழ் ஆலோசிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன. அதேபோன்று, இப்போதும் ஆலோசிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்படும் என்றாா்.

பிபிசி ஆவணப்பட விவகாரம்: இந்திய பிரதமா் மோடி தொடா்பான சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடா்பான கேள்விக்கு, ‘பாகிஸ்தான் ஏற்கெனவே என்ன சொன்னதோ, அதையே உலகுக்கு பிபிசி வெளிக்காட்டியுள்ளது. வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொண்டது. ஆனால், இப்பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் இன்னும் அதை கற்கவில்லை’ என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019, பிப்ரவரியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போா் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பின்னா், 2019, ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இருதரப்பு தொடா்புகள் மேலும் மோசமடைந்தன.

பயங்கரவாதமும் விரோதமும் இல்லாத சூழலை உறுதி செய்தால்தான், பாகிஸ்தானுடன் வழக்கமான அண்டை நாட்டுக்கான உறவை பராமரிக்க முடியும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT