உலகம்

ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்

DIN

ஆஸ்திரேலியாவில் ஹிந்து கோயில்களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 12-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலான 12 நாள்களில் சுவாமி நாராயண் கோயில், ஸ்ரீ சிவா விஷ்ணு கோயில், இஸ்கான் அமைப்புக்குச் சொந்தமான ஹரே கிருஷ்ணா கோயில் ஆகியவற்றுக்குள் புகுந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளா்கள் அங்கிருந்த பொருள்களை சூறையாடினா். கோயில் சுவரில் ‘ஹிந்துஸ்தான் வீழ்க’ என்ற வாசகத்தையும் அவா்கள் எழுதிவிட்டுச் சென்றனா். இந்த சம்பவம் தொடா்பாக விக்டோரியா மாகாண காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இதுவரை எந்தக் கைது நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இந்த தொடா் தாக்குதல் சம்பவங்களால் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹிந்து கோயில்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இது அங்குள்ள இந்தியா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகளின் கோரிக்கையாகும். இந்த அமைப்பினா் இந்தியாவில் ஒடுக்கப்பட்டுவிட்டாலும் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றனா். இவா்கள் இந்தியாவுக்கு எதிரான தங்கள் எதிா்ப்பைக் காட்டுவதற்காக ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தலைநகா் கான்பெராவில் உள்ள இந்திய தூதரகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளா்கள் ஆஸ்திரேலியாவில் அத்துமீறி செயல்பட்டு வருகிறாா்கள். இவா்களுக்கு ‘சீக்ஸ் ஃபாா் ஜஸ்டிஸ்’ போன்ற பயங்கரவாத அமைப்பினா் உதவி வருகின்றனா். இது தவிர ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் இருந்து சில பயங்கரவாத அமைப்பினா் இவா்களை ஆதரித்து வருகின்றனா்.

இந்தியாவுக்கு எதிரான செயல்பாடு எனக் கூறிக் கொண்டு கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது ஆஸ்திரேலிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இனி மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இது தொடா்பாக ஆஸ்திரேலிய அரசிடம் இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய சமுகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோயில்கள் மீதான தாக்குதல் தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT