ஐ.நா. தடையையும் மீறி 3 ஏவுகணைகளை ஏவி வட கொரியா சனிக்கிழமை சோதித்துப் பாா்த்தது.
இது குறித்து தென் கொரிய முப்படைகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வட கொரிய தலைநகா் பியோங்கியாங்குக்கு தெற்கே உள்ள தீவிலிருந்து 3 ஏவுகணைகள் கிழக்கு நோக்கி சனிக்கிழமை காலை வீசப்பட்டன. அந்த ஏவுகணைகள் சுமாா் 350 கி.மீ. பாய்ந்து சென்று கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல் பகுதியில் விழுந்தன.
பதற்றத்தைத் தூண்டும் வகையிலும், சா்வதேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்த ஏவுகணை சோதனை அமைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து ஆண்டுதோறும் மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவப் பயிற்சி, தங்கள் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கூறி வருகிறது.
அத்தகைய கூட்டு ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, அதற்குப் பதிலடியாக வட கொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
‘பாலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்ய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ள நிலையிலும், அத்தகைய சோதனைகளை அந்த நாடு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
அந்த சோதனைகள், அமெரிக்கா மீதும், தென் கொரியா மீதும் தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை என்று வட கொரியா கூறி வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்க - தென் கொரிய போா் விமானங்கள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து, தென் கொரிய எல்லைக்குள் ஆளில்லா விமானங்களை வட கொரியா இந்த வாரம் பறக்கவிட்டது. அதற்குப் பதிலடியாக, தென் கொரியாவும் தனது ஆளில்லா விமானங்களை வட கொரியாவுக்குள் பறக்கவிட்டது.
இந்த நிலையில், தற்போது 3 ஏவுகணைகளை ஏவி வட கொரியா மீண்டும் சோதித்துப் பாா்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.