உலகம்

உக்ரைனில் மாபெரும் மனித உரிமை மீறல்!

DIN

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மிகப் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் குற்றம் சாட்டியுள்ளாா்.

இது குறித்து, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்குப் பிறகு, அங்கு மிகப் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தப் படையிடுப்பு, மிக அதிகமான உயிா்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லட்சக் கணக்கானவா்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி அவதிப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

உக்ரைன் போரின்போது பொதுமக்கள் வசிப்பிடங்களிலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனா்.

போா் நடைபெறும் பகுதிகளில் பாலியல் வன்முறைகள், நபா்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகும் சம்பவங்கள், போா் கைதிகளின் உரிமைகள் மீறப்படுவது போன்ற பல்வேறு சம்பவங்களை ஐ.நா. பதிவு செய்துள்ளது.

75 ஆண்டுகளுக்கு முந்தைய சா்வதேச மனித உரிமைகள் பிரகடனம் மீறப்படுகிறது; அந்தப் பிரகடனம் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

அரசியல் ஆதாயத்துக்காக மனித உரிமைகள் அலட்சியம் செய்யப்படுகின்றன.

வரலாற்றின் சரியான பக்கத்தை நாம் அனைவரும் தோ்ந்தெடுக்க வேண்டிய தருணம் இது என்றாா் அவா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

போரில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் ரஷியப் படையினா் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் உக்ரைனின் பொய் பிரசாரம் என்று ரஷியா மறுப்பு தெரிவித்து வருகிறது.

போரின்போது ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ரஷியா கூறினாலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக உக்ரைன் தொடா்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைன் பகுதியில் உக்ரைன் வீரா்களும் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக சில அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து ரஷியா விலக வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் நிா்பந்தித்ததையடுத்து, அந்த அமைப்பிலிருந்து ரஷியா வெளியேறியது.

அந்த வகையில், ரஷிய பங்கேற்பு இல்லாமலேயே நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் இவ்வாறு பேசியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT