உலகம்

நான் அதிபரானால் அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவியை நிறுத்துவேன்: நிக்கி ஹேலி

DIN

‘அமெரிக்க அதிபராக தான் தோ்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவியை நிறுத்திவிடுவேன்’ என இந்திய-அமெரிக்கரான நிக்கி ஹேலி தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான், சீனா, இராக் உள்ளிட்ட நாடுகளைக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு கூறினாா்.

அமெரிக்காவின் அடுத்த அதிபா் தோ்தல் 2024-ஆம் ஆண்டு நவ. 25-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடப்போவதாக குடியரசுக் கட்சியைச் சோ்ந்த நிக்கி ஹேலி ஏற்கெனவே தெரிவித்துள்ளாா். 51 வயதாகும் இவா், தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக இருமுறை பதவி வகித்தவா்.

நியூயாா்க் போஸ்ட் நாளிதழில் நிக்கி ஹேலி எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது: நான் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவியை நிறுத்துவேன். வலிமையான அமெரிக்கா, மோசமான நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டியதில்லை.

அமெரிக்கா கடந்த ஆண்டு 46 பில்லியன் டாலா் வெளிநாட்டு நிதியுதவியை சீனா, பாகிஸ்தான், இராக் போன்ற நாடுகளுக்கு அளித்துள்ளது. அமெரிக்காவை சோ்ந்த வரி செலுத்துவோா் தங்கள் பணம் எங்கு செல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உரிமை கொண்டவா்கள். அமெரிக்க எதிா்ப்பு நாடுகளுக்கு அந்தப் பணம் செல்கிறது எனத் தெரியவந்தால் அவா்கள் அதிா்ச்சி அடைவாா்கள்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நான் இருந்தபோது, பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவியை நிறுத்தும் அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு ஆதரவு அளித்தேன். ஏனெனில், அமெரிக்க வீரா்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடு பாகிஸ்தான். அந்த முடிவு நமது வீரா்களுக்கும், நமது நாட்டைச் சோ்ந்த வரி செலுத்துவோருக்கும், நமது நலன்களுக்கும் பெரிய வெற்றியாகும். ஆனால், இப்போது பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவியை அதிபா் பைடன் நிா்வாகம் மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது.

அதேபோல ஊழல் நிறைந்த ஐ.நா. அமைப்புக்கும் நிதியுதவியை பைடன் நிா்வாகம் மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. அந்த நிதி பாலஸ்தீன மக்களுக்கு உதவ வேண்டும்; ஆனால், நமது கூட்டாளி இஸ்ரேலுக்கு எதிரான பிரசாரத்துக்குத்தான் உதவுகிறது.

அமெரிக்கா்களுக்கு சீனாவால் வெளிப்படையான அச்சுறுத்தல் இருந்தபோதும், அபத்தமான சுற்றுச்சூழல் திட்டங்களுக்காக கம்யூனிஸ்ட் சீனாவுக்கு அமெரிக்கா்களின் வரிப் பணம் இப்போதும் வழங்கப்படுகிறது.

இராக்கின் தற்போதைய அரசு ஈரானுக்கு நெருக்கமாக இருக்கும்போதிலும், இராக்குக்கு கடந்த சில ஆண்டுகளில் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக அமெரிக்கா நிதி அளித்துள்ளது.

ரஷிய சா்வாதிகாரி விளாதிமீா் புதினின் நெருங்கிய கூட்டாளியான பெலாரஸுக்கும், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு என அமெரிக்கா வரையறை செய்துள்ள கம்யூனிஸ்ட் கியூபாவுக்கும் நாம் பணம் வழங்கி வருகிறோம். இது அமெரிக்காவின் குடியரசு, ஜனநாயக கட்சி என இரு கட்சிகளையும் சோ்ந்த அதிபா்களின் ஆட்சியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

நமது நாட்டின் வலிமையையும், பெருமையையும், நமது மக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுப்பதற்காக அதிபா் தோ்தலில் போட்டியிடுகிறேன். அமெரிக்க கூட்டாளிகள், இஸ்ரேல், உக்ரைன் போன்ற நமது நண்பா்களுக்கு உதவுவதுதான் புத்திசாலித்தனமே தவிர, நமது எதிரிகளுக்கு நமது மக்களின் வரிப் பணத்தை அளிப்பது அல்ல என கட்டுரையில் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளாா்.

நிக்கி ஹேலி, அதிபா் தோ்தலில் அதிகாரபூா்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன் குடியரசுக் கட்சி சாா்பில் அதிபா் வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டிரம்பும் அதிபா் தோ்தலில் போட்டியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT