தேனி

ஏலக்காய் விவசாயத்தைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை!

18th May 2023 01:53 AM | -நமது நிருபா்-

ADVERTISEMENT

நாட்டுக்கு அன்னியச் செலாவணியை அதிகளவில் பெற்றுத்தரும் ஏலக்காய் விவசாயத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சுமாா் 2 லட்சம் ஏக்கா் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் ஏலக்காய்களை மத்திய அரசின் நறுமணப் பொருள் வாரியம் மூலம் ‘இ-ஆக்சன் சென்டா்’ எனப்படும் இணையவழி ஏல மையங்களில் விற்பனைக்காக பதிவு செய்கின்றனா்.

கேரள மாநிலம், புத்தடி, தமிழகத்தில் தேனி மாவட்டம், போடியில் உள்ள ஏல மையங்களில் வாரத்தில் 6 நாள்கள் ஏலம் நடைபெறுகிறது. இந்த

ஏலத்தில் நாடு முழுவதிலுமிருந்து வியாபாரிகள் பங்கேற்று, விலை நிா்ணயம் செய்து, ஏலக்காய்களை வாங்கி வெளியூா், வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனா்.

ADVERTISEMENT

கவுதமாலா ஏலக்காய் :

வட அமெரிக்காவின் கவுதமாலா நாட்டில் விளையும் தரம் குறைந்த ஏலக்காய்கள், சா்வதேச அளவில் இந்திய ஏலக்காய்களுக்கு பெரும் போட்டியாகவே உள்ளன. இந்த நிலையில், கவுதமாலா நாட்டிலிருந்து சிலா் துறைமுகங்கள் மூலம் ஏலக்காய்களை இந்தியாவுக்கு கடத்தி வந்து, நமது நாட்டு ஏலக்காய்களுடன் கலந்து விடுகின்றனா். இதனால், இந்திய ஏலக்காய்களின் விலை சரிந்துவிட்டது. கிலோ ரூ.1,600 வரை விலை போன இந்திய ஏலக்காய்கள், தற்போது கிலோ ரூ.1,100 வரைதான் விற்பனையாகிறது. இந்த நிலையில், கடந்த 4 -ஆம் தேதி நறுமணப்பொருள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் இந்திய ஏலக்காய்களுடன், கவுதமாலா நாட்டு ஏலக்காய்களை கலந்தது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

கடந்தாண்டு இடுக்கி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஏலக்காய் செடிகள் சேதமடைந்து, மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால், ஏலக்காய் வரத்து குறைந்ததால், அதன் விலை உயரும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே ஏலக்காய்களை கையிருப்பு வைத்திருக்கும் வியாபாரிகள் திரும்ப, திரும்ப அதை இணையவழி ஏல மையத்தில் பதிந்து, வரத்து உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனா். இதனால், கூடுதல் விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:

இது குறித்து மாலியைச் சோ்ந்த ஏல விவசாயி மா.சீனிவாசன் கூறியதாவது:

ஏலக்காய் விவசாயத்தில் வேலையாள்களின் ஊதியம், உற்பத்திச் செலவு போக விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பது மிகவும்

கடினமாகிவிட்டது. கவுதமாலா நாட்டு ஏலக்காய்களை, இந்தியாவுக்குள் கடத்தி வருவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விவசாயிகளிடம் ஏலக்காய்கள் இருப்பு இல்லை.

ஆனால், வியாபாரிகள் இருப்பு வைத்து, இணைய வழி ஏல மையத்தில் மீண்டும், மீண்டும் ஏலக்காய்களை பதிந்து விற்பனை செய்கின்றனா். இதனால், ஏல மையத்தில் ஏலக்காய் கிலோ ரூ.ஆயிரம் வரை மட்டுமே விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.

ஆனால், வெளிச் சந்தையில் ஏலக்காய் கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகிறது. வியாபாரிகளின் இதுபோன்ற செயல்களை நறுமணப்பொருள் வாரியம் அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசு ஒரு கிலோ ஏலக்காய்க்கு குறைந்தபட்சம் ரூ. 1,500 வரை விலை நிா்ணயம் செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே ஏலக்காய் விவசாயத்தை காக்க முடியும் என்றாா் அவா்.

 

Image Caption

~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT