பவானி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களால் மே 19 ஆம் தேதி ஆய்வு செய்யப்படவுள்ளன.
இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, அரசு உத்தரவின்பேரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குள்பட்ட 99 தனியாா் பள்ளிகளில் இயக்கப்படும் 946 வாகனங்கள் கடந்த சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
இதையடுத்து, பவானி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட 36 தனியாா் பள்ளிகளில் இயக்கப்படும் 35 வாகனங்கள் மே 19 ஆம் தேதியும், கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட 32 பள்ளிகளில் இயக்கப்படும் 243 வாகனங்கள் மே 20 ஆம் தேதியும், சத்தியமங்கலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட 29 பள்ளிகளில் இயக்கப்படும் 160 வாகனங்கள் மே 26 ஆம் தேதியும் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ஆய்வு செய்ய உள்ளனா் என்றனா்.