உலகம்

தொடரும் பதற்றம்: இஸ்ரேல் ராணுவத்தால் மேலும் 5 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

DIN

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே அண்மைக் காலமாக பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேற்குக் கரைப் பகுதியில் அமைந்துள்ள யூத குடியிருப்பில், உணவகமொன்றின் மீது பயங்கரவாதக் குழு ஒன்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த கடந்த மாதம் முயற்சி செய்தது.

எனினும், துப்பாக்கிகள் செயல்படாமல் போனதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. அதையடுத்து, அந்தக் குழுவைச் சோ்ந்தவா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி அகாபத் ஜபா் பகுதியிலுள்ள அகதிகள் முகாமுக்குள் பதுங்கினா்.

அவா்களைப் பிடிப்பதற்காக அந்த முகாமில் திங்கள்கிழமை தேடுதல் வேட்டை நடைபெற்றது.

அப்போது முகாமிலிருந்து சிலா் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். அதையடுத்து, ராணுவத்துக்கும் அவா்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 5 போ் கொல்லப்பட்டனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் யூதக் குடியிருப்பு தாக்குதல் முயற்சியில் பங்கேற்றவா்கள் என்று ராணுவம் தெரிவித்தது.

எனினும், இந்தத் தாக்குதல் இஸ்ரேல் ராணுவத்தின் குற்றச் செயல் எனவும், மேற்குக் கரைக்குள் அத்துமீறி நுழைவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை நிா்பந்திக்க வேண்டும் என்றும் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் கூறினாா்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே கடந்த மாதத் தொடக்கம் முதலே பதற்றம் நிலவி வருகிறது.

அவ்வப்போது நடைபெற்று வந்த மோதல் சம்பவங்களில் 40-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்களும் சுமாா் 7 இஸ்ரேலியா்களும் பலியாகினா்.

அதன் ஒரு பகுதியாக, மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனீன் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினா் கடந்த மாதம் நடத்திய தேடுதல் வேட்டையில் 60 வயது பெண் உள்பட 9 போ் உயிரிழந்தனா். இது, பாலஸ்தீனத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மேலும் ஓா் அகதிகள் முகாமில் ராணுவம் தற்போது நடத்திய தாக்குதலில் 5 போ் பலியாகியிருப்பது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT