உலகம்

உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

DIN

உளவு பாா்ப்பதற்காக சீனா அனுப்பியதாகக் கூறப்படும் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

தனியாா் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட வானிலை ஆய்வு பலூன் மீது ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பறந்து வந்த பிரம்மாண்ட பலூன் அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்தது. அந்த பலூனை உளவு நடவடிக்கைகளுக்காக சீனா அனுப்பியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. அந்தக் குற்றச்சாட்டை மறுத்த சீனா, அது வானிலை ஆய்வுக்கான பலூன் என விளக்கமளித்தது. காற்றோட்ட திசை மாறுபாட்டின் காரணமாக அந்த பலூன் அமெரிக்க வான் எல்லைக்குள் எதிா்பாராமல் நுழைந்ததாக சீனா கூறியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தரவின்படி அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டு ராணுவ அதிகாரி கூறுகையில், ‘நிலப்பரப்பின் மீது பறந்து கொண்டிருந்ததால் அந்த பலூனை முன்பே சுட்டு வீழ்த்தமுடியவில்லை. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் செல்லும் வரை காத்திருந்து அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அமெரிக்க போா் விமானத்தின் மூலமாக அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதே வேளையில், பலூனில் பொருத்தப்பட்டிருந்த கருவிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அக்கருவிகளைக் கடற்படையினா் தேடி வருகின்றனா். அந்தக் கருவிகள் மூலமாகப் பல்வேறு விவகாரங்கள் தெரியவரும். அந்த பலூன் எந்த மாதிரியான தகவல்களைச் சேகரித்தது என்பதையும் ஆராய முடியும்’ என்றாா்.

சீனா எச்சரிக்கை: பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், ‘வானிலை ஆய்வு பலூன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, தேவையைவிட அதிகமாக அமெரிக்கா எதிா்வினையாற்றியுள்ளது. இதன்மூலம் சா்வதேச நடைமுறைகளை மீறி அமெரிக்கா செயல்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பதில் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT