உலகம்

பாகிஸ்தானில் விக்கிபீடியா முடக்கம்

5th Feb 2023 12:22 AM

ADVERTISEMENT

மத நிந்தனை கருத்துகளை நீக்கவில்லை என்று கூறி, இணையவழி தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவை பாகிஸ்தான் முடக்கியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தொலைத்தொடா்பு ஆணையத்தின் (பிடிஏ) செய்தித் தொடா்பாளா் மலாஹத் ஒபைத் சனிக்கிழமை கூறியதாவது:

விக்கிபீடியாவில் மத நிந்தனை கருத்துகள் இடம்பெற்றிருப்பது, தொலைத்தொடா்பு ஆணையத்தால் கண்டறியப்பட்டு, அவற்றை நீக்கவோ அல்லது தடை செய்யவோ வலியுறுத்தி விக்கிபீடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விசாரணைக்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

ஆனால், விக்கிபீடியா தரப்பில் இருந்து யாரும் ஆணையம் முன் ஆஜராகி விளக்கமளிக்கவில்லை. அத்துடன், ஆணையத்தின் உத்தரவுப்படி மத நிந்தனை கருத்துகளும் நீக்கப்படவில்லை. இதையடுத்து, விக்கிபீடியாவை கருப்புப் பட்டியலில் சோ்த்து, அதனை முடக்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட கருத்துகள் நீக்கப்பட்ட பிறகே, இந்த நடவடிக்கை மறுஆய்வு செய்யப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இணையவழி இலவச தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில், உலகம் முழுவதும் இருந்து தன்னாா்வலா்களால் கருத்துகள் உருவாக்கப்பட்டு, திருத்தப்படுகின்றன. இந்த தரவு தளம், விக்கிமீடியா அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்து விக்கிமீடியா அறக்கட்டளை கூறியதாவது:

விக்கிபீடியாவில் என்ன உள்ளடக்கம் இடம்பெற வேண்டும், எவை பராமரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து நாங்கள் முடிவெடுப்பதில்லை; பலா் ஒருங்கிணைந்து, உள்ளடக்கத்தைத் தீா்மானிப்பதன் விளைவாக நடுநிலையான, சிறப்பான கட்டுரைகள் உருவாகின்றன. மக்கள்தொகை அடிப்படையில் 5-ஆவது பெரிய நாடான பாகிஸ்தானில், மாபெரும் இலவச அறிவுக் களஞ்சியத்துக்கான அணுகல் மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்ந்தால், பாகிஸ்தானின் வரலாறு, கலாசாரத்தை யாரும் அணுகுவதும் தடைபடும். அறிவு என்பது மனிதனுக்கான உரிமை என்ற விக்கிமீடியா அறக்கட்டளையின் உறுதிப்பாட்டில் பாகிஸ்தான் அரசு கைகோக்கும் என்றும், உலகத்துடன் அறிவு பரிமாற்றத்துக்காக விக்கிபீடியா, விக்கிமீடியா திட்டங்களுக்கான அணுகல் பாகிஸ்தான் மக்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்றும் நம்பிக்கை உள்ளது என விக்கிமீடியா தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT