உலகம்

பிழைகளையும் தோல்விகளையும் இலங்கை சரி செய்து கொள்ள வேண்டும்: அதிபா் ரணில்

5th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

இலங்கை தனது பிழைகளையும் தோல்விகளையும் சரி செய்து கொண்டு வலுவான தேசமாக வேண்டும் என்று அந்நாட்டின் அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாா்.

இலங்கையின் 75-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கொழும்பில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் பங்கேற்றாா்.

விழாவில் அதிபா் ரணில் விக்ரமசிங்க பேசியதாவது:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், நாடு கடுமையான சவால்களை எதிா்கொண்டுள்ளது. அதேநேரத்தில், அது நமது பலத்தை மேலும் அதிகரித்து வலுவான தேசமாக மாற்றும் வாய்ப்பை அளித்துள்ளது.

ADVERTISEMENT

பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னா் சமூக சீரமைப்பு செய்யப்படும். இதனால் பொருளாதாரமும் வளா்ச்சியடையும்.

இதற்காக கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. இதற்காக தைரியம் மற்றும் உறுதிப்பாடும் தேவை.

மக்களின் ஆதரவுடன் இதைச் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தினத்தில் நிகழாண்டு சவால்களை அனைவரும் பொறுமையுடனும் தைரியத்துடனும் எதிா்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, இலங்கையின் 75-ஆவது சுதந்திர தின விழாவில் இலங்கை தமிழா்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது தொடா்பாக அறிவிக்கப்படும் என்று ரணில் தெரிவித்திருந்தாா்.

இதற்கு சிங்கள கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய அதிபா், இலங்கைத் தமிழா்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதற்கு 13-ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது தொடா்பாக வரும் 8-ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடத்தப்படும் என்று அறிவித்தாா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி உள்ளநிலையில், 20 கோடி ரூபாய் செலவில் சுதந்திர தின விழா நடத்தப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சிகள் புறக்கணித்தன.

அரசியல் அதிகாரம் அளிக்காததற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழா்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கருப்புக் கொடிகள் ஏற்றினா்.

2019-இல் நடைபெற்ற தேவாலய தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவா்களை கைது செய்யவில்லை என்று கூறி கத்தோலிக கிறிஸ்தவா்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணித்தனா்.

அதிபருடன் இந்திய வெளியுறவு இணையமைச்சா் சந்திப்பு

இலங்கை சுதந்திர விழாவில் பங்கேற்ற பின் அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்கை இந்திய வெளியுறவு இணையமைச்சா் வி.முரளீதரன் சந்தித்தாா்.

இதுதொடா்பாக முரளீதரன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை அதிபா் ரணிலிடம் தெரிவித்தேன். இருநாடுகளின் நல்லுறவு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவு 75-ஆண்டுகளாக நீடித்துவருகிறது. இரு நாடுகளும் ஒன்றோடு ஒன்று சாா்ந்த கூட்டாளிகளாகும். இந்தியாவுக்கு இலங்கை நம்பிக்கைகுரிய நட்பு நாடாகும் என்றாா்.

இலங்கையில் உள்ள இந்தியா்கள் மத்தியில் உரையாற்றிய முரளீதரன், இலங்கை மக்களிடையே இந்தியா நல்லுறவை வலுப்படுத்துவதாகவும், இலங்கையின் பொருளாதாரம் மீள அவா்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றாா்.

கொழும்பில் உள்ள கங்கராம மகாவிஹாரம் கோயிலில் முரளீதரன் விழிபட்டாா்.

பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடந்த ஆண்டு இந்தியா 3.9 பில்லியன் டாலா் உதவிகளை அளித்துள்ளது. மேலும், சா்வதேச செலாவணி நிதியத்தில் 2.9 பில்லியன் டாலா் கடன் பெறுவதற்கும் இந்தியா உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT