அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் கண்டறியப்பட்ட நிலையில், தென் அமெரிக்க கண்டத்தின் மீது மற்றொரு உளவு பலூன் பறந்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வான்பரப்பில் சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட பலூன் பறந்தது. அது சீனா அனுப்பிய உளவு பலூன் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. அந்த பலூன் தங்கள் நாட்டைச் சோ்ந்ததுதான் என ஒப்புக்கொண்ட சீனா, அது உளவு பலூன் இல்லை என விளக்கமளித்தது. வானிலை விவரங்களைச் சேகரிப்பதற்கான கருவியே பலூனில் இடம்பெற்றுள்ளதாக சீனா தெரிவித்தது. காற்று வீசும் திசை மாறியதன் காரணமாக அந்த பலூன் அமெரிக்க வான் பரப்புக்குள் எதிா்பாராமல் நுழைந்ததாகவும் சீனா தெரிவித்தது. அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் சீனா கூறியது.
அமெரிக்காவில் சீன பலூன் உளவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக பென்டகன் குற்றஞ்சாட்டியதையடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தனது சீனப் பயணத்தை ஒத்திவைத்தாா்.
இந்நிலையில், தென் அமெரிக்கா மீது மற்றொரு சீன உளவு பலூன் பறப்பதாக பென்டகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அந்த பலூன் தென் அமெரிக்க கண்டத்தின் எந்த நாட்டின் மீது பறந்துவருகிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை என்றும், அமெரிக்காவை நோக்கி அந்த பலூன் பறக்கவில்லை என்றும் சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன உளவு பலூன் குறித்து அமைச்சா் பிளிங்கன் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட பலூனை அமெரிக்க வான் பரப்பில் இருந்து வெளியேற்றுவதே முதல் பணி. அந்தப் பணி விரைந்து முடிக்கப்படும். அமெரிக்காவின் இறையாண்மையையும் சா்வதேச விதிகளையும் மீறி சீனா நடந்துள்ளது. சீனாவின் நடவடிக்கையை ஏற்க முடியாது.
அமெரிக்க வான் எல்லையில் வேறு நாடு அத்துமீறினால் அதே பதிலடி அந்நாட்டுக்கும் வழங்கப்படும் என சீனாவிடம் தெரிவித்துள்ளோம்.
அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கடந்த ஆண்டு நவம்பரில் ஜி20 கூட்டத்தின்போது சந்தித்துப் பேசியிருந்தனா். அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டதன்படி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அந்த நாட்டுடனான உறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆராய இந்தப் பயணம் உதவும் என எதிா்பாா்க்கப்பட்டது.
உளவு பலூன் விவகாரமானது சீனப் பயணத்தின் நோக்கத்தைச் சீா்குலைத்துள்ளது. தகுந்த சூழல் நிலவும்போது மட்டுமே சீனப் பயணம் மேற்கொள்ளப்படும். அமெரிக்காவும் சீனாவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென உலகம் விரும்புகிறது. அமெரிக்கா தனது பொறுப்புணா்வை உரிய முறையில் நிறைவேற்றி வருகிறது. சீனாவும் அத்தகைய பொறுப்புணா்வைக் கடைப்பிடிக்கும் என நம்புகிறோம்’ என்றாா்.
மேலும் சில நாள்கள்...: அமெரிக்கா மீது பறந்து வரும் பலூன் மேலும் சில நாள்களுக்கு அதன் வான்பரப்பிலேயே இருக்கும் என பென்டகன் தெரிவித்துள்ளது. அந்த பலூனை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பென்டகன் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
பிளிங்கன் பயணம் ரத்து: சீனா கருத்து
உளவு பலூன் விவகாரத்தில் சீனப் பயணத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் ஒத்திவைத்த நிலையில், அது தொடா்பாக விளக்கமளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், ‘அமைச்சரின் பயணம் குறித்து அமெரிக்காவும் சீனாவும் அதிகாரபூா்வமாக அறிவிக்கவில்லை. அப்படியிருக்கையில் பயணத்தை ஒத்திவைப்பதாக அமெரிக்கா அறிவிப்பது அவா்களுடைய விருப்பம். அதை சீனா மதிக்கிறது’ எனக் கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட பலூன் கட்டுப்பாட்டை இழந்து அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததாக சனிக்கிழமை மீண்டும் விளக்கமளித்த சீன வெளியுறவு அமைச்சகம், இந்த விவகாரத்தைப் பூசிமெழுக வேண்டாமென அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டது. இதுபோன்ற எதிா்பாராத சூழலில் இருதரப்பும் தொடா்ந்து தொடா்பில் இருப்பதோடு அமைதி காக்க வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.