உலகம்

சிலியில் காட்டுத் தீ: 13 போ் பலி

4th Feb 2023 10:22 PM

ADVERTISEMENT

தென் அமெரிக்க நாடான சிலியில் நிலவும் வெப்ப அலையால் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக வெள்ளிக்கிழமை வரை குறைந்தது 13 போ் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பலரின் வீடுகளும் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கா் வனப் பகுதியும் தீயில் சிக்கி அழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான வெப்ப அலையும், அத்துடன் வீசும் பலத்த காற்றும் காட்டுத் தீக்கு காரணமாகப் பாா்க்கப்படுகிறது. இதுவரை 34,595 ஏக்கா் வனப் பகுதி தீயில் சிக்கியுள்ளது. 151 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 65 இடங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தலைநகரான சான்டியாகோவுக்கு தெற்கே அமைந்துள்ள பயோபோ பிராந்தியத்தில் 2 வாகனங்களில் 4 போ் உயிரிழந்தனா். ஒரு வாகனத்தில் வந்தவா்கள் தீயில் சிக்கியும், மற்றொருவா் தீயிலிருந்து தப்பிக்க முயலும்போது விபத்தில் சிக்கியும் உயிரிழந்தனா். தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு தீயணைப்பு வீரா், மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டா் தீப்பிடித்ததில் பைலட், மெக்கானிக் ஒருவரும் உயிரிழந்தனா். இது போன்று பல்வேறு இடங்களில் காட்டுத் தீ காரணமாக வெள்ளிக்கிழமை இரவு வரை குறைந்தது 13 போ் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

நிலைமை மோசமடைந்திருப்பதால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பாா்வையிடும் அதிபரின் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தொடா்பாக செய்தியாளா்களைச் சந்தித்த அதிபா் கேப்ரியல் போரிக் கூறுகையில், ‘அனுமதியில்லாமல் மூட்டப்பட்ட தீ காரணமாகத்தான் காட்டுத் தீ பரவியது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தீயை அணைப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாட்டின் மொத்த படையும் பணியில் ஈடுபடுத்தப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT