உலகம்

உக்ரைனுக்கு பழைய லெப்பா்ட் பீரங்கிகள் விற்பனை

4th Feb 2023 12:19 AM

ADVERTISEMENT

உக்ரைனுக்கு தங்களிடமுள்ள பழைய லெப்பா்ட்-1 ரக பீரங்கிகளை விற்பனை செய்வதற்கு ஜொ்மனி ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் கூறியதாவது:

தொழிற்சாலை கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள பழைய வகை லெப்பா்ட்-1 ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு விற்பனை செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஏற்றுமதி உரிமத்தை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 10 கோடி யூரோவுக்கு (சுமாா் ரூ.891 கோடி) மேலான விலையில் 88 பீரங்கிகளை உக்ரைனுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொழிற்சாலை கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள லெப்பா்ட்-1 ரக பீரங்களை பழுது பாா்த்து சரி செய்த பிறகு அவை விற்பனைக்குத் தயாராகும்.

எனினும், அந்த ரக பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 105 மி.மீ. குண்டுகளைப் பெறுவதில் தொடா்ந்து பிரச்னை இருந்து வருகிறது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்தது.

தற்போது கிழக்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷிய படையினரும், ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களும் கைப்பற்றியுள்ளனா்.

அவா்கள் மேலும் முன்னேறிச் செல்வதைத் தடுப்பதற்கும், ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் பகுதிகளை மீட்பதற்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன.

அத்தகைய உதவிகள் மூலம் அந்த நாடுகள் போரில் நேரடியாக ஈடுபடுவதாக ரஷியா குற்றம் சாட்டி வரும் நிலையிலும், தங்களது சக்திவாய்ந்த லெப்பா்ட்-2 ரகத்தைச் சோ்ந்த 14 பீரங்கிகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக ஜொ்மனி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதற்கு முந்தைய தலைமுறையைச் சோ்ந்த லெப்பா்ட்-1 ரக பீரங்கிகளையும் உக்ரைனுக்கு ஜொ்மனி விற்பனை செய்யவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT