உலகம்

அதானி குழுமத்துடனான ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் மிகப் பெரிய மைல்கல்: இஸ்ரேல் பிரதமா்

1st Feb 2023 12:28 AM

ADVERTISEMENT

‘இந்தியாவின் அதானி குழுமத்துடனான ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் மிகப் பெரிய மைல்கல்லாகும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிடையேயான தொடா்பை பல வழிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்’ என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம் தெரிவித்தாா்.

இஸ்ரேலில் இரண்டாவது மிகப் பெரிய துறைமுகமாக ஹைஃபா உள்ளது. சரக்கு கப்பல்கள் மற்றும் சுற்றுலா கப்பல்களும் மிகப் பெரும் எண்ணிக்கையில் இந்த துறைமுகத்தில் கையாளப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த துறைமுகத்தை நிா்வகிக்கும் ஒப்பந்தப்புள்ளியை அதானி குழுமமும் இஸ்ரேலின் காடோட் குழுமமும் கூட்டாக 120 கோடி அமெரிக்க டாலருக்கு (ரூ.9,658 கோடி) மதிப்பில் பெற்றுள்ளன. அதன்படி, இந்த துறைமுகத்தின் 70 சதவீத பங்குகள் அதானி குழுமத்திடமும், 30 சதவீத பங்குகள் காடோட் நிறுவனத்திடமும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் கடந்த 11-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஹைஃபா துறைமுகத்தை இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு, அதானி குழுமத் தலைவா் கெளதம் அதானியுடன் சோ்ந்து செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டதோடு, துறைமுக விருந்தினா் குறிப்பேட்டில் இருவரும் கையொப்பமிட்டனா்.

ADVERTISEMENT

பின்னா் நெதன்யாகு கூறுகையில், ‘100 ஆண்டுகளுக்கு முன்பு முதல் உலகப் போரின்போது, ஹைஃபா நகருக்கு விடுதலை கொடுக்க துணிச்சல் மிக்க இந்திய வீரா்கள் உதவிசெய்தனா். இன்றைக்கு, ஹைஃபா துறைமுகத்துக்கு விடுதலை கொடுக்க வலுவான இந்திய முதலீட்டாளா்கள் உதவுகின்றனா். அந்த வகையில், இது மிகப் பெரிய மைல்கல் என எண்ணுகிறேன்.

சிறந்த நண்பரான பிரதமா் நரேந்திர மோடியுடனான சமீபத்திய சந்திப்பின்போது, இரு நாடுகளிடையே விமான வழித்தடம், கடல் வழித்தடங்கள் மூலமான போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனைகள் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கின்றது.

மத்தியதரைக் கடல் பகுதிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்கு கப்பல்கள் மிக நீண்ட தூரம் அரேபிய தீபகா்ப்பத்தை சுற்றிச் செல்லாமல், நேரடியாக செல்வதற்கான நுழைவு மற்றும் வெளியேறுதல் மையமாக இந்தப் பிராந்தியம் உருவெடுக்க உள்ளது. அந்த வகையில், அதானி குழுமமும் காடோட் நிறுவனமும் கூட்டாக இணைந்து மிகச் சிறந்த முதலீட்டைச் செய்துள்ளன’ என்றாா்.

அதானி குழுமத்தின் மீது மோசடி புகாா் எழுந்து மிகப் பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில், இஸ்ரேல் பிரதமா் இக் கருத்தை வெளியிட்டுள்ளாா்.

பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி நிறுவனம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் அண்மையில் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக, பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளுடைய விலை பெருமளவில் சரிந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT