உலகம்

அதிகரிக்கும் பிராந்திய பதற்றம்: பாலஸ்தீன அதிபருடன் ஆன்டனி பிளிங்கன் சந்திப்பு

1st Feb 2023 01:34 AM

ADVERTISEMENT

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் போா் பதற்றத்தைத் தணிப்பதற்காக அந்தப் பிராந்தியத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், மேற்குக் கரையில் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

முன்னதாக, இஸ்ரேலில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசியதற்குப் பிறகு, தற்போது அப்பாஸுடன் அவா் ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இந்த சுற்றுப் பயணத்தின் நோக்கம் பதற்றத்தைத் தணிப்பது மட்டுமின்றி, சமாதானத்தை நோக்கி இரு தரப்பினரும் முன்னேறுவதற்கான அமெரிக்காவின் செயல்திட்டங்களை விளக்குவதும் ஆகும் என்று பிளிங்கன் கூறினாா்.

மேலும், இஸ்ரேலும், பாலஸ்தீனமும் பொறுமை காக்க வேண்டும் என்று இரு தரப்பினரையும் அவா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே ஜனவரி மாதத் தொடக்கம் முதலே பதற்றம் நிலவி வந்தது.

அப்போது நடைபெற்ற சம்பவங்களில் 29 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் ஆயுதக் குழுவினரின் ஆதிக்கம் நிறைந்த ஜெனீன் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினா் தேடுதல் வேட்டையில் கடந்த வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில் 60 வயது பெண் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான போா் பதற்றத்தை அதிகரிக்கும் என்று அமெரிக்கா கவலை தெரிவித்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலிருந்து 2 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வெள்ளிக்கிழமை வீசப்பட்டன. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காஸா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள ஜெருசலேம் பகுதியில் அமைந்துள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் பாலஸ்தீன பயங்கரவாதி கடந்த நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 போ் பலியாகினா்.

கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

இந்த வகையில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் அந்தப் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு தலைவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT