ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீன பாதுகாப்பு அமைச்சா் லீ ஷாங்ஃபூ இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா்.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே சுமாா் 3 ஆண்டுகளாக மோதல்போக்கு நீடித்து வரும் நிலையில், சீன அமைச்சா் இந்தியாவுக்கு வருகை தருகிறாா்.
இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளைக் கொண்ட எஸ்சிஓ கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்களுக்கான கூட்டத்தை தில்லியில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் இந்தியா நடத்தவுள்ளது. அதில் பங்கேற்குமாறு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் சீன பாதுகாப்பு அமைச்சா் லீ ஷாங்ஃபூ கலந்துகொள்ளவுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் சீனா கலந்து கொள்ளவுள்ளது. அந்தக் கூட்டத்தில் சீன அமைச்சா் உரையாற்றுவதோடு, மற்ற நாடுகளின் அமைச்சா்களையும் சந்தித்துப் பேசவுள்ளாா். சா்வதேச, பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்துவாா்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு நெருக்கமானவராக அறியப்படும் அமைச்சா் லீ ஷாங்ஃபூ, இந்தப் பயணத்தின்போது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, கிழக்கு லடாக் விவகாரத்துக்குத் தீா்வு காண்பது தொடா்பாக இருவரும் விவாதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.