உலகம்

ராஜபட்ச சகோதரா்களுடன் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு

30th Sep 2022 12:04 AM

ADVERTISEMENT

 இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபட்ச ஆகியோரை பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசினாா்.

அண்மையில் இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபட்சவை சந்தித்த முதல் வெளிநாட்டு விருந்தினா் சுப்பிரமணியன் சுவாமி ஆவாா். இவா், ராஜபட்ச குடும்பத்தினருக்கு நெருங்கிய நண்பராக கருதப்படுகிறாா்.

கொழும்பில் உள்ள ஜெனரல் சா் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொருளாதார மீட்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடா்பான சா்வதேச கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றாா்.

முன்னதாக, மகிந்த ராஜபட்சவின் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற நவராத்திரி பூஜையில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டாா்; அப்போது, மகிந்த ராஜபட்சவை அவா் சந்தித்துப் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், கோத்தபய ராஜபட்சவை வியாழக்கிழமை காலையில் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

வழக்குரைஞா்கள் உள்ளிட்ட குழுவினருடன் இலங்கை வந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, பிரதமா் தினேஷ் குணவா்தன, இலங்கைக்கான இந்திய தூதா், தமிழ் ஹிந்து மதத் தலைவா்கள் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியதாக குழு உறுப்பினா் ஒருவா் தெரிவித்தாா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த மக்கள், ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து, நாட்டைவிட்டு கடந்த ஜூலை 13-இல் தப்பிய கோத்தய ராஜபட்ச, முதலில் சிங்கப்பூருக்கும் பின்னா் தாய்லாந்துக்கும் சென்றாா். அத்துடன், தனது அதிபா் பதவியையும் ராஜிநாமா செய்தாா். இம்மாத தொடக்கத்தில் தாய்நாடு திரும்பிய அவா், கொழும்பில் பலத்த பாதுகாப்புடன் தங்கியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT