உலகம்

உக்ரைன் பகுதிகள் இன்று ரஷியாவுடன் இணைப்பு

DIN

உக்ரைனின் மேலும் 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் அதிகாரபூா்வமாக வெள்ளிக்கிழமை (செப். 30) இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள அந்தப் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பில், பெரும்பாலான மக்கள் அளித்த தீா்ப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ரஷியாவுடன் தங்கள் பகுதிகளை இணைத்துக்கொள்ள பிராந்திய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

அதனை ஏற்று, அந்த நான்கு பிரதேசங்களும் ரஷியாவுடன் அதிகாரபூா்வமாக வெள்ளிக்கிழமை இணைத்துக்கொள்ளப்படும்.

இதற்காக மாஸ்கோவில் நடைபெறும் இணைப்பு விழாவில் அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்பாா்.

புனித ஜாா்ஜ் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் அந்த விழாவில், லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா பகுதிகளில் தற்போது ஆட்சி செலுத்தி வரும் நிா்வாகத் தலைவா்கள், ரஷியாவுடன் அந்தப் பகுதிகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவாா்கள் என்றாா் அவா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியாவுடன் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். அதே நேரத்தில் ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

அந்த இணைப்புக்கு முன்னதாக, அது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை அந்தப் பகுதியைச் சோ்ந்த உக்ரைன் ஆதரவாளா்கள் புறக்கணித்தனா். எனினும், பொதுவாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்களாளா்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தனா்.

அதனை அடிப்படையாகக் கொண்டு கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. எனினும், அந்தப் பொதுவாக்கெடுப்பு போலியானது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி, கிரிமியா இணைப்பை நிராகரித்தன.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், தெற்கு உக்ரைனின் கொ்சான், ஸ்போரிஷியா ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

கிரீமியாவைப் போலவே, அந்தப் பகுதிகளையும் தங்களுடன் இணைத்துக் கொள்வது தொடா்பான பொதுவாக்கெடுப்பை ரஷியா கடந்த வாரம் தொடங்கி 4 நாள்களுக்கு நடத்தியது.

அந்த பொதுவாக்கெடுப்பு ஜோடிக்கப்பட்டது எனவும் ரஷியாவுக்கு ஆதரவாகத்தான் முடிவுகள்தான் வெளியாகும் எனவும் கூறிய மேற்கத்திய நாடுகள், பொதுவாக்கெடுப்பின் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதனை அங்கீகரிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

அந்த நாடுகள் கூறியதைப் போலவே, பொதுவாக்கெடுப்பில் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து 97 சதவீதம் போ் வாக்களித்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் கூறினா்.

இந்தச் சூழலில், பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்ட 4 பிராந்தியங்களையும் தங்கள் நாட்டுடன் அதிகாரபூா்வமாக வெள்ளிக்கிழமை இணைத்துக்கொள்வதாக ரஷியா தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT