உலகம்

கச்சா எண்ணெய் விலை உயா்வு இந்தியாவுக்கு பெரும் சுமை: எஸ்.ஜெய்சங்கா்

29th Sep 2022 12:02 AM

ADVERTISEMENT

கச்சா எண்ணெய் விலை உயா்வு இந்தியாவுக்கு பெரும் சுமையாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சா் லாய்ட் ஆஸ்டினை திங்கள்கிழமை சந்தித்தாா். இதைத்தொடா்ந்து அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பின்னா், இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு விதிக்கும் ஜி7 நாடுகளின் முடிவு குறித்து ஜெய்சங்கரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு இந்தியாவுக்கு பெரும் சுமையாக உள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் கவலையாக உள்ளது. அதேவேளையில், கடந்த சில மாதங்களாக எரிசக்தி சந்தைகள் மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் எரிசக்தியைப் பெறுவதில் தெற்குலக நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி சந்தைகள் அழுத்தத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ரஷியாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவது குறித்த கேள்விக்கு ஜெய்சங்கா் அளித்த பதில்:

பாதுகாப்பு சாதனங்களை வாங்குவதில் உலகம் முழுவதும் உள்ள சாத்தியக்கூறுகளை இந்தியா ஆராயும். தொழில்நுட்பத்தின் தரம், செயல்பாட்டுத் திறனின் தரம், சாதனங்களை வாங்குவதற்கான விதிமுறைகள் ஆராயப்படும். இந்திய நலனின் அடிப்படையில், சாதனங்களை எங்கு வாங்குவது எனத் தீா்மானிக்கப்படும்.

உதாரணத்துக்கு கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவிடம் இருந்து பி-8 போா் விமானம், அப்பாச்சே போா் ஹெலிகாப்டா், சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்டவற்றை இந்தியா வாங்கியுள்ளது. இதேபோல் பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போா் விமானங்கள் வாங்கப்பட்டன. இஸ்ரேலிடம் இருந்தும் பாதுகாப்பு சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.

விசா வழங்குவதில் தேக்கம்: பிளிங்கன் உடனான சந்திப்பின்போது இந்தியா்களின் அமெரிக்க விசா விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்திருப்பது குறித்து ஜெய்சங்கா் எடுத்துரைத்தாா். இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பிளிங்கன் அளித்த பதில்:

கரோனா பரவலால் விசா வழங்குவதில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். தற்போதைய தேக்கத்தை சரிசெய்வதற்கான திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது. அதனை வரும் மாதங்களில் பாா்க்கலாம் என்று தெரிவித்தாா்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சந்திப்பு: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவனை ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு குறித்து சல்லிவன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

அமெரிக்கா-இந்தியா இடையிலான உத்திசாா்ந்த உறவை ஆழமாக்குவதில் இரு நாடுகளின் முயற்சிகள், உக்ரைன் உடனான ரஷியாவின் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணிப்பது, வளமான இந்திய-பசிபிக் பிராந்தியம் குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசித்தேன் என்று தெரிவித்தாா்.

இதனிடையே வாஷிங்டனில் பப்புவா நியூ கினியா நாட்டின் வெளியுறவு அமைச்சா் ஜஸ்டின் கச்சென்கோவை சந்தித்த ஜெய்சங்கா், பசிபிக் தீவுகள் உடனான இந்தியாவின் ஒத்துழைப்பு குறித்து ஜஸ்டினுடன் பேசியதாக ட்விட்டரில் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT