உலகம்

இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவின் கூட்டாளிகள்

28th Sep 2022 12:46 AM

ADVERTISEMENT

இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு விவகாரங்களில் அமெரிக்காவின் கூட்டாளிகளாகத் திகழ்வதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்தியாவுடன் அமெரிக்கா அதிக நெருக்கம்காட்டி வருகிறது. தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையிலும், சீனா-ரஷியா இடையேயான நெருக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் இந்தியாவுடன் அமெரிக்கா பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதே வேளையில், பாகிஸ்தானின் எஃப்-16 போா் விமானங்களைப் பழுதுபாா்ப்பதற்கான நிதியுதவியையும் அமெரிக்கா வழங்கியிருந்தது. அதற்கு இந்தியத் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்காகவே நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்கத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக அமெரிக்கவாழ் இந்தியா்கள் மத்தியில் பேசிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘‘எஃப்-16 போா் விமானங்களை பாகிஸ்தான் யாருக்கு எதிராகப் பயன்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதுபோன்ற காரணங்களைக் கூறி அமெரிக்கா எவரையும் முட்டாளாக்க முடியாது’’ என்று கூறியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், அமைச்சரின் கருத்து குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸிடம் செய்தியாளா்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா். அப்போது அவா் கூறுகையில், ‘‘இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள நல்லுறவு, அவ்விரு நாடுகளுக்கு இடையேயான தொடா்பை அடிப்படையாகக் கொண்டதல்ல.

இரு நாடுகளும் வெவ்வேறு விவகாரங்களில் அமெரிக்காவின் கூட்டாளிகளாகவே திகழ்கின்றன. அவ்விரு நாடுகளுடனான அமெரிக்காவின் நல்லுறவு தனித்துவம் மிக்கது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆக்கபூா்வ நல்லுறவு நிலவ வேண்டும் எனவும் அமெரிக்கா விரும்புகிறது.

தலிபான் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேணவேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது’’ என்றாா்.

இந்தியாவுடன் பொறுப்புமிக்க நல்லுறவு--பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் பிலாவல் பூட்டோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். சந்திப்பு குறித்து அமைச்சா் பிளிங்கன் கூறுகையில், ‘‘இந்தியாவுடன் பொறுப்புமிக்க நல்லுறவைப் பேண வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. சீனாவின் கடனை விரைவில் திரும்பச் செலுத்தி, வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவும் பாகிஸ்தானும் தொடா்ந்து ஒருங்கிணைந்து செயல்படும். மத சுதந்திரம், நம்பிக்கை, கருத்து வெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றை மக்களுக்கு வழங்க உறுதி ஏற்பது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது’’ என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT