உலகம்

உக்ரைன் பகுதிகள் இணைப்பு: செப். 30-இல் புதின் அறிவிப்பு?

DIN

உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்வதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை ரஷிய அதிபா் விளாதமீா் புதின் வெள்ளிக்கிழமை (செப். 30) வெளியிடுவாா் என்று பிரிட்டன் உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷியாவுடன் தங்கள் பகுதிகளை இணைப்பது தொடா்பாக ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், ரஷிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபா் விளாதிமீா் புதின் வரும் வெள்ளிக்கிழமை உரையாற்றவிருக்கிறாா்.

அந்த உரையின்போது, தங்களால் அண்மையில் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை விளாதிமீா் புதின் வெளியிடுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதலில் தற்போது அந்த நாடு கண்டு வரும் பின்னடைவு, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதாக புதின் அறிவிப்பது, பொதுமக்களிடையே அவருக்கான ஆதரவை மீண்டும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கருதுகின்றனா்.

எனவே, நாடாளுமன்ற உரையின்போது ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளை இணைத்துக் கொள்வதற்கான அறிவிப்பை விளாதமீா் புதின் வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

அதற்கு முன்னதாக, ரஷியாவுடன் இணைவது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை அந்தப் பகுதியைச் சோ்ந்த உக்ரைன் ஆதரவாளா்கள் புறக்கணித்தனா். எனினும், பொதுவாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்களாளா்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தனா்.

அதனை அடிப்படையாகக் கொண்டு கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. எனினும், அந்தப் பொதுவாக்கெடுப்பு போலியானது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி, கிரிமியா இணைப்பை நிராகரித்தன.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதற்காக கிளா்ச்சியாளா்களுடன் இணைந்து ரஷியப் படையினா் சண்டையிட்டு முன்னேறி வருகின்றனா்.

மேலும், கிரீமியா தீபகற்பத்துக்கும் டான்பாஸ் பிராந்தியத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவற்காக இடைப்பட்ட பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றினா்.

இந்த நிலையில், ரஷியாவுடன் இணைவது தொடா்பான பொதுவாக்கெடுப்பு, அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளான லூஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா மற்றும் டொனட்ஸ்கில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

‘ரஷியாவுடன் இணைய விருப்பமா?’ என்ற கேள்விக்கு, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதிலைத் தோ்ந்தெடுப்பதற்கான இந்த பொதுவாக்கெடுப்பில், ரஷியாவுக்கு ஆதரவாகத்தான் முடிவுகள்தான் வெளியாகும் என்று மேற்கத்திய நாடுகள் விமா்சித்தன.

அதைப் போலவே, ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து 97 சதவீதம் போா் வாக்களித்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் கூறினா்.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆற்றவிருக்கும் உரையில் உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக்கொள்வதற்கான அறிவிப்பை புதின் வெளியிடுவாா் என்று தற்போது பிரிட்டன் உளவுத் துறையினா் அச்சம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT