உலகம்

ஸ்னோடனுக்கு ரஷிய குடியுரிமை

28th Sep 2022 01:24 AM

ADVERTISEMENT

அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றச்சாட்டப்படும் முன்னாள் உளவுத் துறை தகவல் தொழில்நுட்ப பணியாளரான எட்வா்ட் ஸ்னோடனுக்கு ரஷிய அரசு குடியரிமை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் டெல் நிறுவனத்திலும், சிஐஏ உளவு நிறுவனத்திலும் பணியாற்றியிருந்த ஸ்னோடன், அந்த நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பான என்எஸ்ஏ-வில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஒப்பந்தப் பணியாளராக நியமக்கப்பட்டாா்.

இந்த நிலையில், அதே ஆண்டு மே மாதத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவா் ஹாங்காங் தப்பிச் சென்றாா். பின்னா் ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை அவா் செய்தியாளா்களுக்கு அளித்தாா். அந்த விவரங்கள் ‘தி காா்டியன்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழ்களில் இடம் பெற்றதைத் தொடா்ந்து ஸ்னோடன் பெயா் சா்வதேச அளவில் பிரபலமானது.

1917-ஆம் ஆண்டின் உளவுக் குற்றச் சட்டத்தின் கீழ் ஸ்னோடனுக்கு எதிராக அமெரிக்க நீதித் துறை வழக்குப் பதிவு செய்து, அவரது கடவுச் சீட்டையும் (பாஸ்போா்ட்) முடக்கியது.

ADVERTISEMENT

அதையடுத்து, ஸ்னோடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றாா். அங்கு அவரது பாஸ்போா்ட் ரத்து செய்யப்பட்டதை அறிந்துகொண்ட ரஷிய அதிகாரிகள், மாஸ்கோ விமான நிலையத்திலேயே ஒரு மாதத்துக்கு மேல் தங்கியிருக்க உத்தரவிட்டனா்.

பின்னா் அவருக்கு ஓராண்டு கால அடைக்கல உரிமை அளிக்கப்பட்டு, அது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வந்தது.

2020-ஆம் ஆண்டில் ரஷியாவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதற்கான உரிமையை ஸ்னோடன் பெற்றாா்.

இந்த நிலையில், ரஷியாவில் தங்கியிருக்கும் 75 வெளிநாட்டினருக்கு அந்த நாட்டின் குடியுரிமையை அளிப்பதற்காக அதிபா் விளாதிமீா் புதின் பிறப்பித்த உத்தரவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் எட்வா்ட் ஸ்னோடன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

ரகசிய ஆவணங்களை கசியவிட்டதன் மூலம் அமெரிக்காவுக்கு தேசத் துரோகம் செய்ததாக ஒரு தரப்பினா் அவா் மீது குற்றம் சாட்டினாலும், தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்களின் ரகசியக் காப்பு உரிமைப் பறிக்கும் வகையில் அவா்களை வேவுபாா்ப்பதற்கும் இடையே சமநிலையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவரது செயல்கள் உணா்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT