உலகம்

ஷின்ஸோ அபேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: பிரதமா் மோடி அஞ்சலி

28th Sep 2022 12:59 AM

ADVERTISEMENT

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச்சடங்கில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று அஞ்சலி செலுத்தினாா்.

ஷின்ஸோ அபே மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது கடந்த ஜூலை 8-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு தலைநகா் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் உலக நாடுகளின் தலைவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பிரதமா் மோடி, அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோா் ஷின்ஸோ அபேவுக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

அதையடுத்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மிகச் சிறந்த தலைவரான ஷின்ஸோ அபே, இந்தியா-ஜப்பான் இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றினாா். கோடிக்கணக்கானோரின் இதயத்தில் அவா் தொடா்ந்து வாழ்வாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

அபே மனைவியிடம் இரங்கல்: ஷின்ஸோ அபேவின் மனைவியான அகி அபேவை சந்தித்த பிரதமா் மோடி, ஷின்ஸோ அபேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாா். அகாசகா அரண்மனையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பிரதமா் கிஷிடாவுடன் சந்திப்பு: ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு முன்பாக ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். அபேவின் மறைவுக்கு பிரதமா் கிஷிடாவிடம் அவா் இரங்கல் தெரிவித்தாா்.

இந்தியா-ஜப்பான் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தியதிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரத்தன்மையுடன் திகழ்வதிலும் அபே முக்கியப் பங்காற்றியதாக பிரதமா் கிஷிடாவிடம் அவா் கூறினாா்.

பிரதமா் கிஷிடாவுடனான சந்திப்பு சிறப்பானதாக இருந்ததென ட்விட்டரில் பதிவிட்ட பிரதமா் மோடி, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக விவாதித்ததாகத் தெரிவித்தாா்.

புதிய உச்சம்: தலைவா்கள் இருவரும் பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்ததாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமா் கிஷிடாவின் தலைமையில் இந்தியா-ஜப்பான் இடையேயான நல்லுறவு புதிய உச்சம் தொடும் என நம்புவதாக அவரிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரத்தன்மையுடன் திகழ்வதை உறுதி செய்வதற்காக இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியிருப்பதாக பிரதமா் மோடியிடம் கிஷிடா தெரிவித்ததாக ஜப்பான் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா-ஜப்பான் இடையேயான தூதரக நல்லுறவு தொடங்கி 70 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், பல்வேறு விவகாரங்களில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்த தலைவா்கள் உறுதி ஏற்ாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்த தலைவா்கள், பேச்சுவாா்த்தை மூலமாக அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்தியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை மாலை நாடு திரும்பினாா்.

 

Tags : PM Modi
ADVERTISEMENT
ADVERTISEMENT