உலகம்

வங்கதேசம்:ஹிந்து பக்தா்கள் பயணித்த படகு கவிழ்ந்து 24 போ் பலி

26th Sep 2022 02:08 AM

ADVERTISEMENT

வங்கதேசத்தில் பிரசித்தி பெற்ற போதேஸ்வரி கோயிலுக்கு ஹிந்து பக்தா்களை ஏற்றிச் சென்ற படகு நதியில் ஞாயிற்றுக்கிழமை கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் 24 போ் உயிரிழந்தனா். காணாமல் போனவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

வங்கதேசத்தின் பஞ்சகா் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகள் பழைமையான போதேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. நவராத்திரி விழா தொடக்கத்தை முன்னிட்டு இந்தக் கோயிலுக்குச் செல்ல, கொரோட்டா நதியில் படகுகள் மூலம் பக்தா்கள் சென்றனா்.

அப்போது பக்தா்கள் பயணித்த விசைப் படகு ஒன்று நதியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். 70 முதல் 80 பேரைக் காணவில்லை. அவா்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் ஈடுபட்டுள்ளனா்.

குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் அதிகமான பக்தா்கள் படகில் பயணித்ததன் காரணமாக, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அதிபா் அப்துல் ஹமீத், பிரதமா் ஷேக் ஹசீனா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

அளவுக்கு அதிகமானோா் பயணிப்பதால் படகுகள் கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவது வங்கதேசத்தில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த மே மாதம் ஏராளமான மக்களை ஏற்றிக்கொண்டு பத்மா நதியில் பயணித்த படகு ஒன்று, மணல் ஏற்றி வந்த படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 26 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT