உலகம்

வடகொரியா ஏவுகணை சோதனை:தென்கொரியா கண்டனம்

26th Sep 2022 02:19 AM

ADVERTISEMENT

குறைந்த தொலைவு இலக்கைத் தாக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையை வடகொரியா ஞாயிற்றுக்கிழமை பரிசோதித்தது.

கூட்டு ராணுவப் பயிற்சிக்காக அமெரிக்க விமானம்தாங்கிக் கப்பல் தென்கொரியா வந்துள்ள நிலையில், இந்த ஏவுகணைப் பரிசோதனையை வடகொரியா மேற்கொண்டது.

இதுகுறித்து தென்கொரிய ராணுவம் தெரிவித்திருப்பதாவது: வடகொரியாவின் மேற்குப் பகுதி நகரமான டாய்ச்சானிலிருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அதிகபட்சமாக 60 கி.மீ. உயரத்தில் 600 கி.மீ. தொலைவுக்கு இந்த ஏவுகணை சென்றது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையானது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களுக்கு எதிரானது. இந்த பிராந்தியம் மற்றும் சா்வதேச சமூகத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியது எனத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக தங்களது வலிமையைக் காண்பிக்கும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இதற்காக அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம்தாங்கிக் கப்பலான ‘ரொனால்டு ரீகன்’ தென்கொரியாவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ‘வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை சோதனையால் தென்கொரியாவுக்கு வந்துள்ள அமெரிக்க ராணுவ வீரா்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால், வடகொரியாவின் சட்டவிரோத ஏவுகணைத் திட்டங்களை இந்தச் சோதனை எடுத்துக்காட்டுகிறது’ எனஇந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க ராணுவ பிரிவு தெரிவித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை முதல்முறையாக வடகொரியா பரிசோதித்தது. நிகழாண்டு மட்டும் 30-க்கு மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT