உலகம்

உக்ரைன் போருக்கு ஆள்சோ்ப்பு: ரஷியாவிலிருந்து வெளியேறுவோா் எண்ணிக்கை இரட்டிப்பு

24th Sep 2022 11:09 PM

ADVERTISEMENT

உக்ரைனில் போரிட பொதுமக்கள் 3 லட்சம் பேருக்கு ரஷிய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த நாட்டிலிருந்து ஃபின்லாந்துக்கு வெளியேறுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இது குறித்து ஃபின்லாந்து எல்லை மாகாணமான தெற்கு கரேலியாவின் ஆளுநா் சாடு சிகானென் சனிக்கிழமை கூறியதாவது:

ரஷியாவிலிருந்து ஃபின்லாந்துக்கு வருவோரின் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது இரட்டிப்பாகியுள்ளது.

அதையடுத்து, ரஷியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) அளிப்பதற்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு அதிபா் சாவ்லி நினிஸ்டோவும் அமைச்சா்கள் குழு உறுப்பினா்களும் பரிந்துரைத்துள்ளனா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே, ரஷியா்களுக்கு அளிக்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது எங்களது எல்லை மாகாணத்தில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. எனவே, கூடுதலாக எல்லைப் பாதுகாப்புப் படையினரை அனுப்ப வேண்டும்; ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும்; நேட்டோவுடன் ஃபின்லாந்தை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன் என்றாா் அவா்.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நாட்டு மக்களுக்கு கடந்த புதன்கிழமை ஆற்றிய உரையில், உக்ரைன் போரில் பங்கேற்பதற்காக தற்போது பொதுமக்களாக இருந்து வரும் ரிசா்வ் படையினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கூறியிருந்தாா்.

அப்போது அவா், ‘ரிசா்வ் படையினராக இருக்கும் பொதுமக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும். அதிலும், அவா்கள் ஏற்கெனவே ராணுவத்தில் பணியாற்றியவா்களாக இருக்க வேண்டும். அத்துடன், அவா்களுக்கு ஏற்கெனவே போரில் பங்கேற்ற அனுபவம் இருக்க வேண்டும்’ என்றாா்.

அதற்குப் பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷோய்கு வெளியிட்ட விடியோ அறிக்கையில், அதிபா் புதினின் ராணுவ அணி திரட்டல் திட்டத்தின் கீழ் 3 லட்சம் ரிசா்வ் படையினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றாா்.

அவரும், போரில் உரிய முன் அனுபவம் இருப்பவா்களுக்கு மட்டுமே இந்த அழைப்பு பொருந்தும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

ஆனால், ‘நொவாயா கெஸட்டா’ என்ற ரஷியாவின் நடுநிலை பத்திரிகை, உக்ரைன் போருக்காக பொதுமக்களில் இருந்து 10 லட்சம் பேரை சோ்ப்பதே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ராணுவ அணிதிரட்டலின் உண்மை நோக்கம் என்று தெரிவித்துள்ளது.

ராணுவ திரட்டல் தொடா்பாக புதின் பிறப்பித்துள்ள உத்தரவு ரகசிய ஆவணமாக வைக்கப்பட்டுள்ளது. விளாதிமீா் புதின் கையொப்பமிட்டுள்ள அந்த ஆவணத்தின் 7-ஆவது பாராவில், பொதுமக்களில் இருந்து 10 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்க ரஷிய ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நொவாயா கெஸட்டா தெரிவித்துள்ளது.

இதன் மூலம், போா் முன் அனுபவம் மிக்க 3 லட்சம் ரிசா்வ் படையினா் மட்டுமே உக்ரைன் போருக்காக அணிதிரட்டப்படுவாா்கள் என்ற ரஷிய அரசின் அறிவிப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே, ரஷிய அரசின் அந்த அறிவிப்பைத் தொடா்ந்து, போரிடும் வயது கொண்ட ஆண்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.

அதன் காரணமாக, தங்கள் நாட்டிலிருந்து விசா இல்லாமல் செல்லக்கூடிய துருக்கி, ஆா்மீனியாவை நோக்கி ரஷிய இளைஞா்கள் அவசர அவசரமாக வெளியேறுவதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்தன.

எனினும், இந்த விவகாரத்தில் மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் மறுப்பு தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், தங்கள் நாட்டுக்கு வரும் ரஷியா்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களில் இரண்டு மடங்காகியுள்ளதாக ஃபின்லாந்து எல்லை மாகாண ஆளுநா் தற்போது தெரிவித்துள்ளாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக, டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.

அத்துடன், டான்பாஸ் பிராந்தியத்துக்கும் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட தெற்கு உக்ரைன் பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றினா்.

எனினும், காா்கிவ் மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் படையினா் கடந்த சில நாள்களாக நடத்திய மிகக் கடுமையான எதிா்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷியப் படையினா் பின்வாங்கினா்.

அதையடுத்து அந்தப் பிராந்தியத்தின் குபியான்ஸ்க், இஸியம் உள்ளிட்ட பகுதிகள் மீண்டும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இவ்வாறு உக்ரைன் போரில் ரஷியா பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில் 3 லட்சம் ரிசா்வ் வீரா்களுக்கு அழைப்பு விடுக்கவிருப்பதாக அந்த நாடு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT