உலகம்

பாகிஸ்தான்: ஹிந்து பெண், 2 சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம்

24th Sep 2022 11:14 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஒரு பெண் மற்றும் 2 சிறுமிகளை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து, முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது.

அந்நாட்டில் சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிரான அராஜகங்களின் வரிசையில் அண்மைக்கால சம்பவமாக இது நிகழ்ந்துள்ளது.

சிந்து மாகாணத்தின் நரஸ்பூா் பகுதியைச் சோ்ந்த மீனா மேக்வாா் (14), மிா்புா்காஸ் நகரை சோ்ந்த மற்றொரு ஹிந்து சிறுமி, இதே பகுதியைச் சோ்ந்த திருமணமான ஹிந்து பெண் ஆகியோா் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளனா். இச்சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உள்ளூா் காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

திருமணமான ஹிந்து பெண், தனது 3 குழந்தைகளுடன் கடத்தப்பட்டதாகவும் இதுகுறித்து அவரது கணவா் அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சிந்து மாகாணத்தில் ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் மற்றும் கட்டாய திருமணம் செய்துவைக்கப்படுவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கரீனா குமாரி என்ற ஹிந்து சிறுமி இக்கொடுமைக்கு ஆளானாா். இதுகுறித்து அவா் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தாா். கடந்த மாா்ச் மாதம் அடுத்தடுத்து 3 சிறுமிகள் இதேபோல் கடத்தப்பட்டனா். கடந்த மாா்ச்சில், தனது காதலை ஏற்காத பூஜா குமாரி என்ற ஹிந்து பெண்ணை பாகிஸ்தானியா் ஒருவா் சுட்டுக் கொலை செய்தாா். ஹிந்து பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றங்களை குற்றச் செயலாக கருதும் மசோதாக்கள் சிந்து மாகாண பேரவையில் இருமுறை தாக்கலாகி, அவை நிராகரிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT