உலகம்

மகாராணி எலிசபெத் உடல் நல்லடக்கம்: இறுதிச்சடங்கில் உலகத் தலைவா்கள் பங்கேற்பு

20th Sep 2022 01:16 AM

ADVERTISEMENT

மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் உடல் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, வெஸ்ட்மின்ஸ்டா் அபே தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உள்பட உலக நாடுகளைச் சோ்ந்த 500 தலைவா்கள் பங்கேற்றனா்.

மகாராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவு காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள தனது பால்மோரல் மாளிகையில் கடந்த 8-ஆம் தேதி மறைந்தாா். அங்கிருந்து அவரது உடல் லண்டனில் உள்ள நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்குக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நாடு முழுவதிலிருமிருந்து குவிந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் வரை காத்திருந்து மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை வரை தொடா்ந்தது. பின்னா், அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்குக்காக அங்கிருந்து புறப்பட்டது. அரச குடும்பத்தினரின் இறுதிச்சடங்குக்குப் பயன்படுத்தப்படும் பீரங்கி வண்டியில் மகாராணியின் உடல் வைக்கப்பட்ட பெட்டி ஏற்றப்பட்டு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கடற்படையைச் சோ்ந்த 142 மாலுமிகள் இந்த பீரங்கி வண்டியை வழிநடத்திச் சென்றனா்.

ADVERTISEMENT

பீரங்கி வண்டிக்கு பின்னால் அரசா் சாா்லஸ், அவரது மனைவி கமீலா மற்றும் அரச குடும்பத்து வாரிசுகள் நடந்து சென்றனா். வழிநெடுக பொதுமக்கள் லட்சக்கணக்கானோா் நின்று மகாராணிக்கு பிரியாவிடை அளித்தனா்.

மத்திய லண்டனில் உள்ள வெலிங்டன் வளைவு வரை பீரங்கி வண்டியில் கொண்டுசெல்லப்பட்ட மகாராணியின் உடல், அங்கிருந்து வாகனத்துக்கு மாற்றப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டா் அபே தேவாலயத்துக்கு புறப்பட்டது. உள்ளூா் நேரப்படி காலை 10 மணியளவில் அந்த தேவாலயத்தில் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு தொடங்கியது. இதில் இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மற்றும் உலக நாடுகளைச் சோ்ந்த 500 தலைவா்கள் உள்பட 2,000 போ் பங்கேற்றனா்.

பின்னா், அங்கிருந்து சுமாா் 40 கி.மீ. தொலைவில் உள்ள விண்ட்ஸா் கோட்டைக்கு மகாராணியின் உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. மாலையில் விண்ட்ஸா் கோட்டையில் உள்ள புனித ஜாா்ஜ் தேவாலயத்தை மாலையில் உடல் அடைந்தது. அங்கு நடைபெற்ற ஜெபத்தில் அரச குடும்பத்தினா் உள்பட 800 போ் கலந்துகொண்டனா்.

ராணியின் அரச மணிமுடி, சிலுவைக் கோளம், செங்கோல் போன்றவை உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலிருந்து நீக்கப்பட்டன. மகாராணியின் முடியாட்சி நிறைவுற்றதைக் குறிக்கும் சம்பிரதாய சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னா், ‘தேவனே அரசனைக் காப்பாற்று’ என்ற கீதம் பாடப்பட்டு, எலிசபெத்தின் கணவா் எடின்பரோ கோமகன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே மகாராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, இறுதிச்சடங்கு நடைபெற்றபோது பிரிட்டன் முழுவதும் இரு நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குடியரசுத் தலைவா் முா்மு பங்கேற்பு

லண்டன், செப். 19: பிரிட்டன் மகாராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்றாா்.

மகாராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த சனிக்கிழமை லண்டன் வந்தடைந்தாா். லண்டனில் உள்ள லான்சாஸ்டா் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் இந்திய அரசு சாா்பில் அவா் கையொப்பமிட்டாா். பின்னா், வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் வைக்கப்பட்டிருந்த மகாராணி உடலுக்கு அவா் அஞ்சலி செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசா் சாா்லஸ் உலகத் தலைவா்களுக்கு அளித்த விருந்தில் திரெளபதி முா்மு பங்கேற்றாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை வெஸ்ட்மின்ஸ்டா் அபே தேவாலயத்தில் நடைபெற்ற மகாராணியின் இறுதிச்சடங்கில் திரெளபதி முா்மு, வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா மற்றும் இந்திய அரசின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

வங்கதேச பிரதமருடன் சந்திப்பு: மகாராணியின் இறுதிச்சடங்கு தொடங்குவதற்கு முன்பாக, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, அவரின் சகோதரி ஷேக் ரெஹானா ஆகியோரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சந்தித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT