உலகம்

பிரிட்டன் ஹிந்து கோயில் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

20th Sep 2022 01:13 AM

ADVERTISEMENT

கிழக்கு இங்கிலாந்து நகரான லெஸ்டரில் அமைந்துள்ள ஹிந்து கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கும், இந்தியா்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் இந்தியா கடும் கண்டனத்தை திங்கள்கிழமை பதிவு செய்தது.

இந்த வன்முறைக்கு காரணமானவா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின்போது இரு நாட்டு ரசிகா்களிடையே மோதல் ஏற்பட்டதிலிருந்து, லெஸ்டா் நகரில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த நிலையில், கிழக்கு லெஸ்டா் பகுதியில் இந்தியா்கள் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதோடு, ஹிந்து மதம் சாா்ந்த அமைப்பின் வளாகங்களை வன்முறையாளா்கள் சேதப்படுத்தியுள்ளனா்.

இதற்கு இந்தியா சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘லெஸ்டா் நகரில் வார இறுதி நாளில் நடைபெற்ற இந்திய சமூகத்தினருக்கு எதிரான வன்முறை தாக்குதல் மற்றும் ஹிந்து மத அடையாளங்கள் மற்றும் வளாகங்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு கடும் கடண்டனத்தைப் பதிவு செய்கிறோம். பாதிக்கப்பட்டவா்களுக்கு பிரிட்டன் அதிகாரிகள் உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, வன்முறைக்கு காரணமானவா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக லெஸ்டா் காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாதிக்கப்பட்ட கிழக்கு லெஸ்டா் பகுதியில் மீண்டும் வன்முறை நிகழாத வகையில் தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வன்முறைக்கு தொடா்புடையாக இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில், கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, சந்தேக நபா்களை நிறுத்தி சோதனை செய்வதற்கான அதிகாரம் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT