உலகம்

பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்!

5th Sep 2022 05:23 PM

ADVERTISEMENT


பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டனை ஆளும் கன்சா்வேடிவ் கட்சியின் தலைவராக உள்ளவர்தான் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்கும் நிலையில், கட்சியின் தலைவர் தேர்தலில் இந்திய வம்சாவளியும் முன்னாள் அமைச்சருமான ரிஷி சுனக்கை எதிர்த்து போட்டியிட்ட வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார்.

கரோனா தொற்று பரவல் காலத்தில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி, பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கேளிக்கை விருந்து நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அது நாட்டில் பெரும் விமா்சனங்களை ஏற்படுத்திய நிலையில், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிா்ப்பலைகள் எழுந்தன.

அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக், போரிஸ் மீது அதிருப்தி தெரிவித்து தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து அமைச்சா்கள் பலா் ராஜிநாமா செய்தனா். உள்கட்சியிலேயே கடும் அதிருப்தி எழுந்ததால், பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா் போரிஸ் ஜான்சன்.

ADVERTISEMENT

அதையடுத்து ஆளும் கன்சா்வேடிவ் கட்சியின் தலைவரைத் தோ்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆளும் கட்சித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவரே நாட்டின் பிரதமராகவும் பொறுப்பேற்பாா். பிரதமா் போட்டிக்குள் பலா் நுழைந்த நிலையில், இறுதிச்சுற்றில் ரிஷி சுனக்குக்கும் வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

பிரதமா் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் நுழைந்ததில் இருந்தே, அவருக்கு ஆதரவு அலை வீசியது. கட்சியின் எம்.பி.க்கள் வாக்களிக்கும் ஆரம்பகட்ட வாக்கெடுப்புகளில் அவா் தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தாா். அந்த சுற்றுகள் நிறைவடைந்து கட்சி உறுப்பினா்கள் வாக்களிக்கும் முறை தொடங்கி, தோ்தலுக்கான பிரசாரமும் அனல்பறந்த நிலையில், அந்த நிலைமை படிப்படியாக மாறியது. அவரை எதிா்த்துக் களம்கண்ட லிஸ் டிரஸுக்கான ஆதரவு தொடா்ந்து பெருகியது.

சுமாா் 1.60 லட்சம் கட்சி உறுப்பினா்கள் வாக்களிப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த தேர்தலில், ரிஷி சுனக்கை எதிர்த்து போட்டியிட்ட லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று கட்சித் தலைவரான நிலையில், பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளார்.

ரிஷி சுனக் தோல்விக்கான காரணம்

ரிஷி சுனக்கின் தோல்விக்கு போரிஸ் ஜான்சனின் ஆதரவாளா்கள் முக்கியக் காரணமாகப் பாா்க்கப்படுகிறாா்கள். முதன் முதலில் ராஜிநாமா செய்து போரிஸின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியவா் ரிஷி சுனக். பிரதமா் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கைத் தவிர யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என கட்சி உறுப்பினா்களிடம் போரிஸ் ஜான்சன் கோரியிருந்தாா். அவரது கடும் எதிா்ப்பு, ரிஷி சுனக்குக்கான ஆதரவைப் பெருமளவில் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT